Friday, 25 August 2017

நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.

2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து......
'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் - 
பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்! 
வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங்கள்!
நீட் தேர்வு, ஒரு அராஜகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி மாற்றுக்கருத்து இருப்பதாய் சொல்கிறவர்கள் கூட, மாநிலத் தேர்வு முறையிலிருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்ட வந்த கோபத்தாலேயே நீட் தேர்வுக்கு ஆதரவு போலப் பேசுகிறார்கள். மற்ற படி, இந்த ஒற்றை தேர்வு முறையை ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் யாருக்கும் இல்லை.
இந்தத் தேர்வு முறையின் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறவர்கள், தமிழகப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்தப் பாதிப்பு, அவர்களது பெற்றோரை உடனடியாகவும், சமூகத்தை பொறுத்திருந்தும், நமது அரசியல் உரிமையை நிதானமாகவும் காவு வாங்கப்போகிறது.
மாநில உரிமைகளைப் பேணுவதற்கான எந்தவொரு முனைப்பும் தைரியமும் இல்லாத அரசாங்கமே நமது பலவீனம். நீதிமன்றங்களும் கைவிட்டு விட்ட நிலையில் இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே கேள்வி - ஏன் தமிழகப் பொதுமக்கள் இந்த அநியாயத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழ மறுக்கிறார்கள்?
வெகுஜன கிளர்ச்சி நடைபெறுவதற்கு சில அனுகூலமான சூழல்கள் தேவைப்படுகின்றன.
1. இந்தப் பிரச்சினையைப் தமிழகப் பொதுப்பிரச்சினையாக சித்தரிக்கக்கூடிய 'பேச்சு' ஒன்று தேவைப்படுகிறது. அதாவது, இது நகர்ப்புற மாணவர்கள் பிரச்சினை, மெட்ரிகுலேசன் மாணவர்கள் பிரச்சினை, மேட்டுக்குடியினரின் பிரச்சினை, பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினை என்ற விவாதங்களைக் கடந்து இது தமிழகத்தின் பிரச்சினையாக சித்தரிக்கப்பட வேண்டும்.
2. இப்படி சித்தரித்ததை முன்மொழியக்கூடிய ஒரு கதாபாத்திரம் நமக்குத் தேவை. இந்தப் பாத்திரம், சுயநலமற்றவராகவும், எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமலும் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த கதாபாத்திரங்கள் என்பது என் கணிப்பு. 
3. ஆசிரியர்கள் என்று சொல்லும் போது, ஆசிரியர் சங்கங்களை நான் சொல்லவில்லை என்பது முக்கியம். சங்கங்கள், ஆசிரியர்களின் சொந்த பணிப்பாதுகாப்புகளை கண்காணிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை என்பதால், வெகுஜனம் சங்கங்களை முழுமையாக நம்பிவிடுவது இல்லை. எனவே, நான் இந்தக் கதாபாத்திரங்களை ஆசிரியர்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.
4. சங்கங்களின் சாயல் இல்லாமல், ஆசிரியர்கள் இந்த எதிர்ப்புணர்வுகளை பொது அமைதிக்கு எந்தவொரு பங்கமும் இல்லாமல் நடத்துவது இன்னும் முக்கியம். உதாரணமாய், இந்த எதிர்ப்புகளை ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் வேலை நேரங்களுக்குப் பின்பும் மாணவர்களோடு இரவெல்லாம் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தத் தொடங்கலாம். இந்த உள்ளிருப்புப் போராட்டம் உடனடியாய் வெகுஜனத்தை ஈர்க்கும். தத்தம் குழந்தைகளைத் தேடிக்கொண்டு பெற்றோர்கள் வர ஆரம்பிப்பார்கள். ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சியில் மெரினாவும் தமுக்கமும் போராட்டக் களங்களானது போல, இந்த முறை பள்ளிக்கூடங்கள் போராட்டக்களங்களாக மாறும். இதிலொரு நாடகத்தன்மை இருக்கிறது. ஆனால், இந்த நாடகத்தன்மையே வெகுஜனக் கிளர்ச்சிக்கான விதை.
5. பள்ளிக்கூடங்களை ஆசிரியர்கள் அடைக்க மறுத்து, மாணவர்களோடு அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டால் நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜனக் கோபத்தை எளிதாய் வெளிக்கொண்டு வரமுடியும்.
இது முழுக்க முழுக்க கற்பனை. தமிழ் சினிமாவொன்றின் கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கலாம். இருக்கலாம் என்ன, அப்படியே தான். ஆனால், இது தான் வெகுஜனங்களை திரட்டுவதற்கான இப்போதைய வழி. வழக்கமாய் இந்த நாடகங்களை தலைவர்களே செய்வார்கள். அவர்கள் இல்லாத பட்சத்தில் மக்கள் தான் செய்ய வேண்டும். 
நீட் தேர்வுக்கு எதிராக, பள்ளிக்கூடங்களை பூட்ட மறுக்கும் தர்ணாக்களை ஆசிரியர்கள் தொடங்கினால்....'

Tuesday, 4 July 2017

மிஷல் ஃபூக்கோ பயிலரங்கம் - தொடரும் உரையாடல்

ஃபூக்கோ மீது பாய்வது எப்படி?

மதுரையில் நடைபெற்ற ஃபூக்கோ கருத்தரங்கம் இனிய சந்திப்பாக மாறியிருந்தது.  இத்தனை இளைஞர்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.  அவ்வளவு உற்சாகம் அவர்களிடம்.  ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் இவர்கள் கிளம்பி அவர்களிடம் மதுரைக்கு வந்திருந்தனர்.  

ஃபூக்கோவை, கேள்வி மட்டுமே பட்டவர்கள், காதால் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் நுழைந்து பார்த்து ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்று திரும்பியவர்கள், பாதி கிணறு தாண்டியவர்கள், ஃபூக்கோவை கொலை செய்ய விரும்பியவர்கள், அதிருப்தியாளர்கள், மருண்டவர்கள் என்று விதவிதமான நபர்கள்.  கலைடாஸ்கோப்பின் கடைசி தகவலின் படி, கலந்து கொண்டவர்கள் மொத்தம் 65 பேர்.  

‘கலைடாஸ்கோப்’ பிரபாகர் நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.  அவர் முப்பது பேர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.    முன்ஜாக்கிரதையோடு, எதற்கும் கூடவொரு பத்து என்று, நாற்பது பேரை சமாளிப்பதற்கான தளவாடங்களோடு மட்டுமே அவர் வந்திருந்தார்.  ஆனால், வெள்ளிக்கிழமை மாலையே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருந்தது.  

வழக்கம் போல இந்தக் கருத்தரங்கிலும் நான் நிறைய நேரம் பேசினேன்.  அதே போல நிறைய நேரம் பார்வையாளர்கள் பேசக் கேட்டும கொண்டிருந்தேன்.  குறிப்பாக, ஒவ்வொரு உரைக்குப் பின்பும் நடைபெற்ற விவாதங்கள் அர்த்தமுள்ளவையாய் இருந்தன.  சனிகிழமை நடுநிசி வரை நடைபெற்ற விவாதம் ரசிக்கும் படி இருந்தது.  இது நிச்சயமாய் எனக்கு புது வித அனுபவமாய் இருந்தது.  நாம் பேசுவதைக கேட்கக் கூடிய காதுகள் மத்தியில் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுப்பினை!

எனது அனைத்து உரைகளின் நோக்கமும், ஃபூக்கோ என்ற மனிதரை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்றே இருந்தது.  இது ஒரு வகையில் ஃபூக்கோவை விதந்தோதுவது போலத்தான்.  ஆனால், அதுவே தான் அவர் மீதான விமர்சனமும்.  தன்னிலையின் மரணத்தைச் சொன்னவரின், தன்னிலையை விளங்கிக் கொள்வது தான் என் முன்னிருக்கும் சவால் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதை ஆரம்பத்தில் சிலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.  குறிப்பாக, இ. முத்தையா கொஞ்சம் அதிகமாகவே சலிப்படைந்தார்.  அதை உடனடியாகச் சொல்லவும் செய்தார்.  ஃபூக்கோ மீதான விமர்சனங்களைச் சொல்லாமல் இப்படி ஒற்றையாய் ஃபூக்கோவை மட்டுமே முன்மொழிவது தவறான அணுகுமுறை அல்லவா என்று அவர் கேட்டார்.  நிச்சயமாய், முத்தையா மாதிரியான பேராசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இது உவப்பான முறையியல் இல்லை தான்.  ஆனால், நான் ஃபூக்கோவை இப்படி அறிமுகம் செய்வதில் பிடிவாதமாக இருந்தேன்.

ஏனெனில் என் சிந்தனை முறை இப்படியாகத்தான் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது.  நான் முதலில் யாரையும் அவரது மூளைக்குள் சென்றே பார்க்க விரும்புவேன்.  ஒவ்வொரு சிந்தனையையும் மீண்டும் உருவாக்கிப் பார்த்துப் புரிந்து கொள்வது தான் எனக்கு வசதியாக இருக்கிறது.  

இது ஒரு வகை நாடக உத்தியும் கூட.  கொஞ்ச நேரத்திற்கு அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறி நின்று யோசித்துப் பார்ப்பது.   இது முழுக்க முழுக்க புனைவுத்தன்மை உடையது.  எனவே, இதை நிஜம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  ஆனாலும், எந்தவொரு சிந்தனையையும் நான் அதன் தோற்றுவாயில் நின்றே யோசிக்க விரும்புகிறேன்.  இதற்காக அந்த சிந்தனையை வரலாறு என்ற தளத்தில் இருத்தவே முயற்சி செய்கிறேன்.
இன்னும் அதிகமாக, அயோத்திதாசரைப் புரிந்து கொள்வதிலும், அம்பேத்கரைப் புரிந்து கொள்வதிலும் நான் இந்த உத்தியையே பயன்படுத்தி வந்திருக்கிறேன்.  

சிந்தனையாளர்கள் மட்டுமல்ல, நான் வாசிக்கிற ஒவ்வொரு எழுத்தையும் இப்படித்தான் வாசிக்கிறேன்.  பூமணியை, பெருமாள்முருகனை, சுந்தர ராமசாமியை, ஜெயமோகனை, கரகாட்டக் கலைஞர் கெளசல்யாவை, தோற்பாவைக் கலைஞர் பரமசிவ ராவை என்று ஒவ்வொருவரையும் இப்படித்தான் நான் வாசிக்கிறேன்.  இது ஒரு வகை கூடு விட்டு கூடு பாயும் உத்தி.

ஆனால், ஃபூக்கோவின் கருத்துகள் இந்த முறையியலின் அடிப்படையை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கின்றன.  அப்படியொரு தனி உடல், தனி மூளை எங்கும் இருக்கவில்லை என்று அவர் மறுத்துக் கொண்டே இருக்கிறார்.  தனக்குள் ஊடுறுவுவதை அவர் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறார்.  கூடு பாயாதே என்று அல்ல, பாய்வதற்கு இது கூடு இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஒவ்வொரு முறை நான் ஃபூக்கோவை வாசிக்கும் பொழுதும் இந்த விளையாட்டையே செய்து கொண்டிருக்கிறேன்.  


இந்த இரு நாள் கருத்தரங்கிலும் எனது உரைகள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன.  நான் கொஞ்சம் கொஞ்சமாக ஃபூக்கோ என்ற சித்திரத்தை வரைய வரைய எனது இன்னொரு கை அதை அழித்த படியே வந்து கொண்டிருந்தது.  இறுதியில் நான் சித்திரத்தை வரைந்தே முடித்து விட்டேன்.  ஆனால், அது வெற்றிகரமாக அழிக்கவும் பட்டிருந்தது. பங்கேற்பாளர்களின் பதிவுகள்:
கார்த்திக்:நீண்ட கருத்தியல் பயணத்தை முடித்ததன் அமைதியுடன் இப்பதிவை பகிர்கிறேன். கடந்த இரு நாட்களாக கலைடாஸ்கோப் மையம் ஏற்பாடு செய்த "மிஷல் ஃபூக்கோ: அறிவு, அறம், அதிகாரம்" என்ற தலைப்பில் பயிலரங்கம் சூலை 1மற்றும் 2 ல் நடந்து முடிந்துள்ளது.

பின்னை நவீனச் சிந்தனையாளர்களை அறிந்துக் கொள்ளும் உற்சாகமும் சற்றே ஆர்வமிகுதியுடன் சென்றேன். அரைகுறையாக ஃபூக்கோவை அறிந்து வைத்திருந்ததும், முன்னமே பின்னை நவீனத்துவ பற்றிய குளிர் கால பயிலரங்கில் கலந்துக் கொண்டதும் கருத்தியல் புரட்சிகர செயல்பாடாக என்னை யோசிக்க செய்தன. இம்மனநிலையை ஃபூக்கோவின் கருத்துக்கள் பொடியாக்கின.

Dharmaraj Thamburaj, சுந்தரகாளி, குமரன், பிரேம் குமார் இமானுவேல் மற்றும் .முத்தையா போன்றவர்கள் வாயிலாக பயிலரங்கம் ஃபூக்கோவின் சிந்தனையை அறிமுகப்படுத்தியது. ஃபூக்கோ யார்? அவரின் சிந்தனை எவ்வாறு அறியப்படுகிறது? அவரை நாம் ஏன் புரிந்துக் கொள்ள வேண்டும்? அவரின் ஆய்வும் சிந்தனையும் மேற்குலகில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவரின் சிந்தனை வழியே மூன்றாம் உலக நாட்டினராக நம் செய்ய வேண்டியது என்ன? POWER RELATION, MODERN EUROPEAN'S CONSTRUCTED SELF, DEAD OF THE MAN, GOVERNMENTALITY, PANOPTICISM, என இவ்விரண்டு நாட்களில் பெற்றவை புதிய உந்துதல்களை ஏற்படுத்தின.

Prabahar Vedamanickam மற்றும் அவரின் குழு அருமையாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். 'தற்கொலைகளின் காலம்' என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது அருமை.
டி.தருமராஜ்,சுந்தர்காளி மற்றும் குமரன் ஆகியோரின் சிந்தனைச் செறிவும் பகிர்தலின் எளிமையும் சிக்கலான ஃபூக்கோவை எங்கள் மண்டையில் ஏற்றியது. சற்று கூடுதலான அமர்வின் மூலம் டி.தருமராஜ் குழப்பப்பட்ட எங்களுக்கு ஃபூக்கோவை நிதானப்படுத்தி அளித்தார்.

வெவ்வெறு பகுதியிலிருந்து வந்திருந்த நண்பர்களின் எண்ணிக்கை சற்று அதிகமானது. இருந்தும் எண்ணிக்கை மிகுதியால் சிக்கலின்றி அமைதியாக நிகழ்வு நடந்தது. சென்னை loyola , MCC மற்றும் JNU நண்பர்கள் கூடுதல் புரிதலோடு வந்து கவனத்தை ஈர்த்தனர். அவர்களின் சிந்தனை பார்வை எனக்கு ஆச்சரியப்படுத்தியது.
மொத்தத்தில் நாம் சிந்தனைத்தளத்தில் செய்ய வேண்டிய பணி நம் நிலத்தில் ஏராளம் உள்ளது என்ற ஆரோக்கிமான மனநிலையில் பயிலரங்கை நிறைவு செய்தோம். ரேவதி:
*அறிவு - அறம் - அதிகாரம்: மிஷல் ஃபூக்கோவை முன்வைத்து...*

கடந்த ஜூலை 1,2 -2017 ஆகிய இரு தினங்களில் மதுரை கடவூர் செசியில் கலைடாஸ்கோப் குழு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் அவர்கள் நடத்திய "அறிவு - அறம் - அதிகாரம்: மிஷல் ஃபூக்கோவை முன்வைத்து" என்ற கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், சென்னை கிறித்தவக் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, பி.எஸ்.ஜி. கோவை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் தனிப்பட்ட ஆர்வலர்கள் உள்ளிட்ட கலவையுடன்
கிட்டத்தட்ட 65 பேர் கலந்துகொள்ள ஜுன் 30 மாலை 7 மணியளவில் அறிமுகத்துடன் இனிதாக ஆரம்பித்தது...

எப்போதும் பேராசிரியர் பிரபாகரன் அவர்களுக்கு உண்டு உறைவிடக் கருத்தரங்காக அமைப்பதே வழக்கம். காரணம் கருத்தரங்கின் கவனம் சிதறக் கூடாது சிதற விடவும் கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவர்.. இதேபோல் கடந்த நவம்பர் மாதம் 5 நாள் கருத்தரங்காக கொடைக்கானலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் புரிதல் பற்றியத் தலைப்பிலும் இதுபோன்ற நோக்கத்துடனே ஏற்பாடு செய்திருந்தார்..
அத்தோடு கருத்தரங்கத்திற்கான இடத்தேர்விலும் சற்று அதிகமாக மெனக்கெடக் கூடியவரும் கூட..
கொடைக்கானலில் அழகிய மலையில் பசுமை படர்ந்த குளிர் சூழல் என்றால் மதுரை செசி, மதுரையின் புற வெளியில் அமைதியான மரங்களும் செடிகளும் பூக்களுமென காற்றோத்தோடு சுற்றி வைத்த ஓட்டுவீடுகள்...
இடம் மட்டுமல்ல உணவும் அவ்வாறே... காலை 6.30க்கு தேனீர் 8.30 காலை உணவு, 11 மணிக்கு மீண்டும் தேனீர், மதியம் 1 மணிக்கு உணவு, மாலை 4 மணிக்கு தேனீர் இரவு 8 மணிக்கு உணவு என்று தீர்க்கமாக பட்டியலிடப்பட்ட உணவு வகைகள்..

கருத்தரங்க அமர்வுகளும் எல்லா கருத்தரங்கைப் போன்றது அல்ல.. கருத்தரங்கின் முதல் நாள் மாலையே தங்குமிடத்திற்கு வந்துவிட அன்று மாலையே கருத்தரங்கு பற்றிய அறிமுகமும் கலந்து கொள்பவர்கள் பற்றிய அறிமுகமும் அரங்கேறும். இரவு நேர உணவிற்குப் பின் ஒவ்வொரு நாளும் திரைப்படம் ஒன்றும் திரையிடப்படும். திரைப்படம் என்பதும் மிகவும் என்ற சொல்லைவிட அதை விட மிக அதிக கவனத்தோடு கருத்தரங்கத் தலைப்போடு ஒத்துப்போகக் கூடிய படங்களாக இருப்பவையே காட்டப்படும். இந்த முறை ஒரு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.. பின் அதைப்பற்றிய விமர்சனங்களுடன் கூட்டம் இரவு 11.30 அல்லது 12 மணிக்குக் கலையும்.. மறுநாள் காலை எந்தவிதமான மரபுமில்லாமல் 9 மணிக்கு (வரவேற்பு வர்ணனை வார்த்தை ஜாலங்கள் பொன்னாடை பரிசு என்று எதுவுமில்லாமல்) அமர்வு ஆரம்பித்து தேனீருக்கு 30 மணித்துளிகள் உணவிற்கு 1 மணி நேரம் ஆக ஒருநாளுக்குக் காலை 9 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை (14.30மணி நேரங்களில்) நடைபெறக்கூடிய அமர்வுகளில் 3 மணி நேரமே இடைவேளை (பெரும்பாலும் அப்போதும் அமர்வு பற்றிய விவாதமே நடைபெறும்) ஆனால் இது ஒருபோதும் சலித்ததுமில்லை... வெறுத்ததுமில்லை என்பதே உண்மை.

இதையெல்லாம் சொல்லக் காரணமும் உண்டு... ஒருவர் ஒரு கருத்தைப் பற்றி பேசுகிறார் என்றால் அதைக்கேட்க மனதும் மூளையும் தயாராக இருக்க வேண்டும் (ஃபூக்கோ பற்றிய கருத்தரங்கிற்குப் பின் மனது மூளை உண்மை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தயக்கமாகத் தான் இருக்கிறது.) அதற்கான ஏற்பாட்டை மாணவனாக மாணவ மனநிலையிலிருந்தே பேராசிரியர் பிரபாகரன் அவர்கள் செய்து வருகிறார்.. அதற்காகவே இந்த இடத்தில் அவருக்கு நன்றியைக் கூற வேண்டும். அது கடமையும் கூட...

பேராசிரியர் பிரபாகரன் அவர்கள் நடத்திய இந்த இரண்டு கருத்தரங்கிலும் கதாநாயகனாக அல்லது கர்ப்பகிரக சிலையாக வீற்றிருந்தவர் மதுரை காமராசர் பல்கலை, நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டுத் துறை பேராசிரியர் டி.தர்மராஜ் அவர்கள் என்றால் அது மிகையல்ல. இது கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி கருத்தரங்கை நடத்தியவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதும் கூட. (இதில் புகழ்ச்சி இல்லை. உணர்ந்தவர்களால் மட்டுமே கூறக்கூடிய நன்றி உணர்வு)

பேராசிரியர் தர்மராஜ் அவர்களின் உரை மென்மையான பேச்சு ஆனால் ஆணி அடித்தார் போன்ற கருத்துக்கள்... எவ்வளவு கடினமான கோட்பாட்டையும் கேட்பவர்களுக்குச் சலிப்பில்லாமல் முகம் மாறாமல் 'இது தான் இவ்வளவுதான் இந்தா பிடி' என இலகுவாக கையில் தருவதுபோல.... கவனத்தைக் கருத்தில் நிறுத்தி மனதில் ஏற்றக் கூடிய வித்தை பயின்றவர்.. அவரைக் கொண்டு நடத்தப்பட்ட இரு கருத்தரங்கும் மரபு நவீனம் பின் நவீனம் ஃபூக்கோவின் கோட்பாடு இதன் வழியாக ஐரேப்பியரின் வரலாறு, வாசிப்பு மறுவாசிப்பு பன்முகவாசிப்பு காலணியம் பின் காலணியம் அமைப்பியல் கட்டுடைப்பு மீட்டுவாக்கம் இருத்தலியம் என எல்லாவற்றையும் ஒரு ஐரேப்பியராக மாறி அறிமுகம் செய்து இதை தமிழிலக்கியங்களோடு எப்படி எவ்வாறு எதன் தேவைக்காக ஒப்பிட வேண்டும் என்றும் புதிய யோசனை முறையையும் அறிமுகப்படுத்தினார்.

மற்றொருவர் பேராசிரியர் .முத்தையா அய்யா அவர்கள்... பொதுவாக அவரது உரை சற்று கடினமாக இருப்பதாகவே உணர வைக்கும். ஆனால் ஃபூக்கோவை அவரது சமகாலத்தவரோடு ஒப்பிட்ட முறை என்பது ஒரு ஒப்பீட்டை இவ்வளவு எளிமையாக தர முடியுமா (அதுவும் மேலை நாட்டு கோட்பாட்டாளர்களின் கோட்பாடுகளை) என்று இப்போதும் வியக்க வைக்கிறது.

சரி. கருத்தரங்கு நடந்தது.. நானும் கலந்து கொண்டேன்.... இதில் என் புரிதல் அல்லது நான் கற்றுக் கொண்டது என்ன என்பதையும் சொல்லியாக வேண்டுமல்லவா... அப்பொழுதுதான் இந்த உரை முழுமையடையும்... 

கிட்டத்தட்ட பல்வேறான தலைப்புகளில் நடைபெற்ற 80 கருத்தரங்கில் கலந்துகொண்ட எனக்கு இந்த இரண்டு கருத்தரங்கும் ஒரு பெரிய மைல்கல் என்றே சொல்ல வேண்டும். எனது முனைவர்ப்பட்டத் தலைப்பு சங்க இலக்கியம் தொல்காப்பிய இலக்கணம் சார்ந்தது.. ஆகையால் என் வாசிப்பு அதைத் தாண்டி வந்ததே இல்லை... உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு நவீனம் பின் நவீனம் என்றாலே ஒரு பற்றுதல் இல்லாத நிலைதான்.. ஆக நவம்பரில் நடந்த நவீனம் பின் நவீனம் பற்றிய கருத்தரங்கிற்குச் செல்லும்போது அந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை தான்.. 

ஆனால் ஐந்து அமர்வுகளில் பேராசிரியர் தர்மராஜ் அவர்கள் மரபு, நவீனம், பின் நவீனம் பற்றிய அவரது பேச்சு... இன்னும் நினைத்து நினைத்து பூரித்துப் போய்கிறேன் (இதுவும் புகழ்ச்சியில்லை) எதுவும் தெரியாமல் சென்ற எனக்கு அதைப்பற்றிய அடிப்படையை.. எனக்கு விளங்கும்படி பயிற்றுவித்தவர். அந்த அடிப்படையை வாசிக்கப் பொறுமையில்லாமல் தானே அதை இத்தனை நாளும் வெறுத்து வந்தேன். இலக்கணத்தைத் தான் வேப்பங்காய் என்பார்கள். எனக்கு நவீனம் பின் நவீனம் தான் வேம்பாக இருந்தது. அதைப் பலாப்பழத்தின் கடினத்தன்மை உரித்துப் பழத்தை மட்டும் சுவைக்கத் தந்தார் என்றே சொல்ல வேண்டும்... அதுபோலத் தான் ஃபூக்கோ பற்றிய கருத்தரங்கும்

எத்தனையோ கருத்தரங்கில் கலந்திருந்தாலும் பேராசிரியர் தர்மராஜ் அவர்கள் வார்த்தையிலிருந்து மட்டும் தான் நான் ஃபூக்கோ என்ற பெயரைக் கேட்டுள்ளேன். அதுவும் கடந்த நவம்பர் 2016இலிருந்து... சென்ற கருத்தரங்கில் ஃபூக்கோவை பேராசிரியர் முன் மொழிந்தார் தான். அதிலிருந்த கருத்தை எடுத்துக்கொண்டு ஃபூக்கோவைப் புறம் தள்ளிவிட்டிருந்தேன். அடிக்குறிப்பாக மட்டுமே அவர் பெயர் என் எழுத்துக்களில் இருந்தது. அந்தப் பெயரைத் தவிர வேறு எதும் அறியாமலே சென்று அமர்ந்தேன். அறிமுகத்தன்று எனக்குக் கொஞ்சம் மூச்சடைத்துதான் போனது. சென்னை, தில்லி மாணவர்கள் ஃபூக்கோவைச் சற்று அதிகமாகவே அறிந்திருந்தனர். இந்தக் கருத்தரங்கு அவர்களைப் ஃபூக்கோ பற்றிய ஆய்வுக்கு நகர்த்தவா அல்லது என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்து வளர்க்கவா என்ற பெரிய கேள்வி... 

ஆனால் வழக்கம்போல் பேராசிரியர் தர்மராஜ் அவர்களின் உரை என்பது அறிமுகம் செய்து ஆய்வுக்கு நகர்த்துவதாகவே அமைந்தது.. யாருக்கு எது தேவையோ அவர்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது போன்று. ஃபூக்கோவின் அறிவு அறம் அதிகாரம் பற்றிய விவாதம் என்ன என்று முதலில் அறிவின் தொடக்கமாக ஒரு ஓவியத்தோடு தொடங்கி அதிகாரம் என்பது எப்படி இருவருக்குள் ஆரம்பித்து அது சங்கலித் தொடராக நீண்டு உலகத்தையே அதிகாரக் கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் கட்டுப்பாடு கண்காணிப்பு என்றும் (கண்காணிப்பு என்றதற்கான விளக்கம் இப்படியுமா? அல்லது இப்படியெல்லாமா என்று வியப்பாகவே மனதை வைத்திருக்கிறது) ஒன்று இருக்குமிடத்தில் முரணான மற்றொன்றும் உள்ளே ஒளிந்திருக்கும் என்றதோடு ஃபூக்கோவின் கோட்பாடு எதை செய்ய நினைத்தது என்றும் முத்தாய்ப்பாய் சொல்லி முடித்ததார். இறுதியில் கருத்தரங்கை முடித்து வெளிவரும்போது ஃபூக்கோவை என்ன செய்வது? ஏற்றுக் கொள்ளவா? அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதா? என்பதான கேள்வி மேலோங்கி நின்றது. ஃபூக்கோவின் வித்தியாசமான அல்லது மாற்று சிந்தனை - யோசனை என்பது இப்படியெல்லாமா சிந்திப்பது? இப்படி சிந்தித்தால் உறவோ அல்லது சமூகம் கட்டமைத்து வைத்துள்ள ஒழுக்கம் என்பதன் நிலை என்னவாக மாறும்? என்பதை யோசனை செய்ய மறுக்கிறது. (இப்படி யோசனை செய்வதைத் தான் அதிகாரம் கற்றுக் கொடுத்துள்ளது என்ற ஃபூக்கோவின் சிந்தனையும் நினைவு வருகிறது)

இறுதியில் பேராசிரியர் தர்மராஜ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ஒற்றைக் கையால் ஓவியம் வரைந்து அதை மற்றொரு கையால் அழித்து கொண்டே வருவது - இறுதியில் முழுமையான படம் வரையப்பட்டு அது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதைப் போல பேராசிரியர் அவரது பணியை முடித்துவிட்டார் (ஃபூக்கோவைப் போல...)

கருத்தரங்கிலிருந்து வந்ததிலிருந்து நிம்மதியும் குழப்பமும் மாறி மாறி குடைந்து கொண்டிருக்கிறது...
ஆனாலும் என்னுள் ஒரு கோபம் முளைத்திருப்பதும் உண்மைதான். இளங்கலை மாணவர்களின் கேள்விகள் சற்று அதிகமாகவே அசர வைத்தது.. என்னுடைய இளங்கலைப் பருவத்தில் என்னை நான் யோசித்துப் பார்த்தேன். என்னை மட்டுமல்ல எங்களது பாடத்திட்டத்தையும். முதுகலையிலும் கூட கேள்விபட்டதில்லை... ஆற்றாமை தாளாமல் என் முதுகலை ஆசிரியரிடம் பாடத்தில் இல்லை சரி ஆனால் இதை அறிமுகம் கூட செய்யவில்லையே என்று..... உங்களுக்கு முந்தியவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். நீங்கள் சுயநிதிப் பாட பிரிவாக மாறியதால் உங்களுக்கு வகுப்பெடுக்க நாங்கள் வரவில்லை.. என்று இது எங்களது தவறல்ல என்பதுபோல கூறிவிட்டார். வருத்தம் ஒருபுறமும் அவமானம் அசிங்கம் ஒரு புறமாக வாட்டியது என்று தான் சொல்ல வேண்டும். முனைவர்ப்பட்டம் முடித்தப்பின் தான் இவைகளைப் பற்றி அறிகிறேன். இப்படித்தானே என்னைப் போன்று நான் படித்த இடங்களிலிருந்து இனிவருபவர்களும் வருவார்கள்...??? ஆனாலும் இன்னொரு சந்தேகமும்... இதுபோன்ற தலைப்பில் இதுவரை கருத்தரங்கு நடத்தியதாகவே தெரியவில்லையே...???? எனக்குக் கிடைத்த வாய்ப்பு இனி வருபவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த பேராசிரியர் பிரபாகரன் அவர்களுக்கும் Prabahar Vedamanickam பேராசிரியர் தர்மராஜ் அவர்களுக்கும் Dharmaraj Thamburaj உடன் உதவிய பேராசிரியர் பெரியசாமி ராஜா அவர்களுக்கும் பேராசிரியர் இரத்தினக்குமார்அவர்களுக்கும் Rathina Kumar பேராசிரியர் அரிபாபு Aribabu Balu அவர்களுக்கும் நாடகத்தில் பங்கெடுத்த திருநாவுகரசு அஙர்களுக்கும் Thirunavukkarasu Arasu பாஷா வடிவேலு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.அரிபாபு:
மிஷல் பூக்கோவும் - அழகிய சித்திரக் காரரும்

மதுரையில் மாற்றுச் செயல்பாடுகளுக்குக் களம் அமைக்கும் "கலைடாஸ்கோப்" , பனிக்காலத்தில் பின்னை நவீனத்துவம் குறித்த பயிலரங்கை நடத்தியது.மேலும்,முதுவேனிற் கால கருத்தரங்கை கடந்த வெள்ளி மாலை தொடங்கி ஞாயிறு மாலை வரை, ஆகச் சிறந்த முயற்சியாக பிரஞ்சு தேசத்துச் சிந்தனையாளார் ஃபூக்கோவைப் புரிந்து கொள்ள தளம் அமைத்தது சிறப்பான முன்னெடுப்பாகும். இந்நிகழ்வானது, சடங்கான கருத்தரங்க வெளியிலிருந்து விலகி பேரொளி பாய்ச்சியது என்று கூறுதல் மிகையல்ல.

வலதுசாரிச் சிந்தனையும் அதனையொட்டிய கதையாடலும் வேர் கொள்ளும் சமகாலத்தில் பூக்கோ போன்ற சிந்தனையாளர் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டியவரே. ஏனெனில், அரசதிகாரம் மாபெரும் பயங்கரமாகத் தினம் தினம் உருவாகிக் கொண்டேதானே இருக்கிறது. முக்கியமாக அரசின் குணமென்பதே அதுதான். அது, ஒரு நாளும் சாதாரண மக்களுக்குச் செல்ல குழந்தையாக மாற வாய்ப்பில்லைதானே.
இச்சூழலில் , ஃபூக்கோ நமக்குத் தேவைப் படுகிறார். ஆனால் அவரைப் புர்ந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. யார் மிக எளிமையாகச் சொல்லிக்கொடுப்பது? இது தமிழ்ச் சூழ்லில் காலம் காலமாக மையம் கொள்ளும் கேள்வி. இக்கேள்விக்கான பதில், இக்கருத்தரங்கில் ஓரளவு கிடைத்தது என்றுதான் கூற வேண்டும். இதனை வளர்த்தெடுக்கும் பட்சத்தில், உலகைப் பாதித்த மிக முக்கியமான சிந்த்னையாளர்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கலாம். அவ்வகையில், தீவிர வாசிப்பாளர்களும் மாற்று உரையாடளுக்குளேயே இருப்பவர்களும் இதனைச் சாத்தியப் படுத்தினார்கள் என்றே நினைக்கிறேன். ஆக, பேரா. .முத்தையா, பேரா. டி.தருமராஜ், பேரா.சுந்தர் காளி, பேரா. பிரேம் குமார் , பேரா. குமரன் ஆகியோருக்கு நன்றி .

சித்திரக்காரர்:

இக்கருத்தரங்கில், ஃபூக்கோவை அதிகமாகப் பேசியவர், அல்லது தூக்கிச் சுமந்தவர் பேரா. டி.தருமராஜ் அவர்களே. சில ஆசிரியர்கள் விசயத்தில் கனமானவர்களாக இருப்பார்கள். அதனை மற்றவர்களுக்கு வழங்கத்தெரியாமல் அல்லது முடியாமல் திணருவார்கள். சில ஆசிரியர்கள் பொத்திப் பத்திரமாக தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். சில ஆசிரியர்களே எவ்வளவு பெரிய விசயத்தையும் மிக எளிமையாகக் கடத்துவார்கள். இந்த எளிமை வழியாக கனமான உரையாடலை முன்னெடுப்பவரே சிறந்த ஆசிரியர். அப்படியானால் சான்று, பேரா.டி தருமராஜ்.

இவர் ஓர் அழகிய சித்திரக்காரர். இவர் உடல் மொழியால் ஓர் அழகிய ஓவியத்தை வரைந்த படியே செல்கிறார். கேட்போர் விசயம் தெரிந்தவரோ, தெரியாதவரோ அனைவரையும் முழுமையாக நம்புகிறார். இந்த நம்புதலே அனைவரையும் உள் இழுக்கிறது. ஃபூக்கோவோ, தெரிதாவோ, சாம்ஸ்கியோ, சசூரோ ஆலன் பாத்தியோ அல்லது யாராகிலும் நம்மூர் மொழியில் ஓர் நாட்டுப்புறக் கதையைச் சொலுவது போல் மிக எளிமையாகச் சொல்லுவதை எப்படித்தான் கண்டடைந்தாரோ ஆச்சரியம் தான். அதே சமயத்தில் நம்மூர் நாட்டுப் புறக் கதையை மேலைச் சிந்தனையார்களின் தியரியோடு பொருத்திப் பார்ப்பதிலும் இவரே தனித்து நிற்கிறார்.

ஆக ,இந்தச் சித்திரக் காரர் வழியாகத்தான் பின்னை நவீனமும், ஃபூக்கோவின் சிந்தனையும் புரியத் தொடங்குகிறது. இதனையேதான் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் சொல்லக் கூடும்.