Skip to main content

கலையெனும் வாதை




(கபாலி கட்டுரையின் மூன்றாம் பகுதி)

கட்டக்கடைசியாய் கபாலியை ஆதரித்து சொல்லப்படுகிற ஒரு வாதம் இருக்கிறது: 'ரஞ்சித், சினிமாவை ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக மாற்றியிருக்கிறார்'.

இதன் தொடர்ச்சியாக, கபாலி திரைப்படத்தைக் கொண்டாடியும், ரஞ்சித் என்ற திரைக்கலைஞரை ஆதரித்தும் தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  அந்தக் கூட்டங்கள் தலித் எழுச்சிக் கூட்டங்களின் சாயலைக் கொண்டிருந்தன. அவ்வாறு நடந்த ஒரு நிகழ்ச்சியில் உன்மத்தம் கரைபுரண்டோடியதை நானே நேரில் கண்டேன். 

இந்தச் சூழலில் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது.
?
******************************
1991ம் வருடம், கழுகுமலைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் ராஜாராணியாட்டம் அல்லது குறவன் குறத்தியாட்டம் அல்லது தெருக்கூத்து என்று அழைக்கப்படும் தென் தமிழக நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.



அப்பொழுது நான் நாட்டுப்புறவியலில் முதுகலை படிப்பை முடித்து விட்டு உயராய்விற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு கிளம்பிச் செல்வதாக இருந்தேன்.  இதனிடையே தமிழகக் கிராமங்களை ஒரு முறை சுற்றி வர வேண்டும் என எனக்கு ஏனோ தோன்றியது.  ஒரு நாள் கிளம்பி, ஊர் ஊராக சுற்றத் தொடங்கினேன்.  இப்படியே ஒரு வருட காலம் போல கிராமங்களில் தங்கியிருந்தேன்.  அந்த நாட்களில் தான் இதைக் கண்டேன்.

அன்றைய தினம், அக்கிராமத்தின் அருந்ததியர் குடியிருப்பில் ராஜா ராணியாட்டம் நடந்து கொண்டிருந்தது.  குடியிருப்பிற்கும் கிராமத்திற்கும் கூப்பிடு தூர இடைவெளி.  அந்த இடைவெளி தான் குறவன் குறத்தி ஆட்டத்திற்கான அரங்க வெளியாக இருந்தது.

இரவு ஒரு மணி வரை எல்லாமே வழக்கம் போலத் தான் போய்க்கொண்டிருந்தது.    திடீரென்று எங்கிருந்தோ நான்கைந்து கார்கள் வந்து நின்றன.  அவற்றின் முகப்பில் திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.   அவர்களில் ஒருவர் (எல்லாரையும் பார்த்து கும்பிட்ட படியே இறங்கியவர்) ஒலிப்பெருக்கியின் முன் வந்து நின்றார்.   அது தேர்தல் நேரம்.  அவர் தான் சங்கரன் கோவில் சட்டமன்ற தனித் தொகுதி வேட்பாளர் என்று சொன்னார்கள். 

திமுகவிற்குள் மறுமலர்ச்சியெல்லாம் வந்திருக்காத காலம் அது.  அதனால், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் அதிகம் வசிக்கும் அக்கிராமத்தில் ஓட்டு சேகரிக்க வந்தவர்களுக்கு, இப்படியொரு நாட்டுப்புற மேடை கிடைத்தது ரொம்பவும் வசதியாக போயிற்று.

அருந்ததிய மக்களுக்கும் இதில் மகிழ்ச்சி தான்.  தங்கள் விழாவிற்கு வேட்பாளர்களெல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற தற்பெருமை அவர்களுக்கு. 

கொஞ்சம் நேரம் போல வேட்பாளர் பேசினார்.   தான் எவ்வாறு பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் பேசுவேன் என்றும், தலைவர் கலைஞர் பட்டியலின மக்களின் மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்றும், திராவிட இயக்கம் எவ்வாறு பட்டியலின மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் இயக்கம் என்றும் அவர் சொல்லி முடிக்கக் கூட இல்லை, எங்கிருந்தோ வந்த சிலர்,  அங்கிருந்த அருந்ததிய இளைஞர்களை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.  ஒன்றிரண்டு பேரை மிதித்து இருட்டுக்குள் இழுத்தும் சென்றனர்.

இதுவெல்லாம் தெரியாதது போல அந்தத் தனித் தொகுதி வேட்பாளர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். முடித்ததும், அதே ஆடம்பரத்துடன் தன் வாகனத்தில் ஏறி அந்த இடத்தைக் காலியும் செய்தார்.

அதன் பின் அங்கே நிலவியது, அசாதாரணம்.  எல்லோருக்கும் அந்த அடிதடியைப் பற்றி யாரிடமாவது பேசித் தணிய வேண்டும் போல இருந்தது;  இந்த அக்கிரமத்தை எங்கே போய் சொல்வது?’  

தூரத்தில் தெரிவது நாயக்கர் வீடுகள். அவ்வீட்டுப் பெண்கள்  இந்த நிகழ்ச்சியை அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.  அருந்ததிய இளைஞர்கள் கூட்டமாக எழுந்து நின்றதால் அப்பெண்களுக்கு மறைத்ததாம்.   விலகி நிற்குமாறு சொன்னதை அருந்ததிய இளைஞர்கள் மதிக்கவில்லையாம்’.  இவ்வளவு தான்.  அதற்குத் தான் அந்த வன்முறை.

யாராவது  இது குறித்து பேச மாட்டார்களா என்று எல்லோருமே ஏங்கிக் கொண்டிருந்தனர்.  அப்படியே யாராவது ஆரம்பித்தாலும் அந்த பேச்ச விடுங்கஎன்றும் அவர்களே சொன்னார்கள்.  சங்கடமும் பயமும் அவர்கள் மனதில் சகதியாய் நிரம்பி வழிந்தது.  

நடக்கிறது எங்க திருவிழா, எவ்வளவு ஏத்தம் இருந்தா, எங்க பசங்களயே வந்து அடிப்பாக?’ என்று  கேட்டு விடவே அவர்கள் விரும்பினார்கள்.   ஆனால், யாராலும் முடியவில்லை.  

மேலும், நாட்டுப்புறக்கலை மீது அபிமானம் கொண்டு, வேடிக்கை பார்க்க வந்த கிராமத்து நாயக்கர்கள் சிலர் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர்.  'ஏய், ஆடச்சொல்லுங்கப்பே'.

இறுகிக் கிடந்தது உலகம்.

ஆட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார்கள்.   தூரத்தில் நின்று பீடி இழுத்துக் கொண்டிருந்த பபூனும் ராஜபார்ட்டும் ஆட்ட வெளிக்கு ஓடினார்கள்.  ஆட்டம் ஆரம்பமானது. 

ஆனால், சுரத்தே இல்லை.  அவர்களும் அசந்து போயிருந்தார்கள். எந்த ஊரிலும் இப்படி பார்க்கவில்லை என்று பேசிக்கொண்டார்கள். 'மனுசத்தன்மை இல்லயே!' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர்களுக்கு கொஞ்சம் பலமான அடி தான்.  ஒரு வீட்டிற்குள் படுக்க வைத்திருந்தார்கள்.  அடித்த வலியை விட, அவமானத்தின் வலி தான் குறைவேனா என்றது.

ஆடி அசைந்து போய்க்கொண்டிருந்த ஆட்டத்தை ஒரு அருந்ததிய பெரியவரே இறுதியில் கலைத்தார்.   

மணிக்குறவன் கதையைத் திருப்பிப் பாடு' என்றார். 

திரும்பவுமா?’ உண்மையில் அப்பொழுது தான் ராஜபார்ட் வேடக்கலைஞர், மணிக்குறவன் மாண்ட கதையை பாடி முடித்திருந்தார்.  அங்கிருந்த அசாதாரண சூழலில் என்ன பாடுகிறார்கள், எப்படி பாடுகிறார்கள் என்ற ஓர்மையெல்லாம் யாருக்கும் இருக்கவில்லை.

இப்ப பாடினியேஅதையே தான் திரும்பப்பாடு.

கூத்துக் கலைஞர்கள் மணிக்குறவன் மாண்ட கதையைத் திரும்பவும் பாடத் தொடங்கினார்கள்.  அதுவொரு கதைப்பாடல்.

மதுரையில் வாழ்ந்து வந்த மணிக்குறவன், ஒரு வீரன்.  ஏராளமான பன்றிகளை வளர்த்து வந்தவன்.  பெண்களால் ரசிக்கப்பட்ட ஆணழகன்.  யாருக்கும் அஞ்சாதவன். 

ஒரு முறை, டி வி எஸ் பேருந்து ஒன்று (அந்த காலத்தில் அது தான் ஒரே போக்குவரத்து வாகனம்.) மணிக்குறவன் வளர்த்த பன்றியை நட்ட நடு வீதியில் தூக்கியெறிந்து கொன்றது.  இதற்கு நியாயம் கேட்கப் போனான் மணிக்குறவன்.  பேருந்தின் ஓட்டுனர்க்கு வந்ததே கோபம். வீதிகள் வாகனங்களுக்கானது என்றார்.  பன்றிகள் நடந்து வந்தால் சாகத்தான் வேண்டும் என்றார்.   டிவியெஸ் ஊழியர்.  அதனால் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. சரமாரியாய் மணிக்குறவனை ஏசத் தொடங்கினார். 

மணிக்குறவன் பதிலே பேசவில்லை.  அரிவாளை எடுத்தான். அங்கேயே அவரை வெட்டிக் கொலை செய்தான்.   பின் ஓடித் தலைமறைவானான்.  அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது.

இது கண்டு மதுரையே திகைத்தது.  அந்த காலத்தில் டிவியெஸ் ஊழியர் என்றால் அரசாங்க ஊழியரை விடவும் அதிகாரமிக்கவர்.  அவரையே ஒருவன் வெட்டி சாய்த்திருக்கிறான்!

தலைமறைவான மணிக்குறவனை போலிஸ் தேடத் தொடங்கியது.   இதனிடையே, மணிக்குறவன் பற்றி மக்கள் விதவிதமானக் கதைகளை சொல்லத் தொடங்கினார்கள்.  'டிவியெஸ் டிரைவரையே சாய்ச்சவன்ல'.

கொஞ்ச நாள் சென்று, எல்லா வீரர்களையும் போல மணிக்குறவனையும் போலிஸ் சுட்டுக் கொலை செய்தது.  மக்கள் அவனுக்காக அனுதாபப்பட்டனர்.   

மணிக்குறவன் மாண்ட கதையை மதுரை பச்சையப்பன் பாடலாக எழுதித் தந்தார்.  நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊரெல்லாம் அதைப் பாடிக் களித்தனர்.  இந்தக் கதையைத் தான் அன்றைக்கு மீண்டும் ஒரு முறை ராஜபார்ட் பாடி முடித்தார்.

முடித்ததும் தான் தாமதம், கூட்டத்திலிருந்து ஒரு இளைஞர் ஓடிப்போய் ராஜபார்ட்டுக்கு பத்தாயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். 

வழங்கியதோடு, ‘அந்தப் பாட்டையே இன்னொரு தரம் பாடு' என்றார்.

இன்னொரு தரமா?’

கூட்டமே, ‘அட, பாடுங்கய்யா' என்றது.

இப்பொழுது, ஆட்டக்காரர்களுக்கு  எதுவோ விளங்கியது. தலையை ஆட்டி உற்சாகமானார்கள்.  மணிக்குறவன் மாண்ட கதையை மீண்டுமொரு முறை பாடத் தொடங்கினர்.   

இந்த முறை ஆட்டமும் சூடு பிடித்தது.  ஸ்திரிபார்ட் கலைஞர், நாயனக்காரரின் முன் நின்று இடுப்பை வேகமாக ஆட்டிக் காட்டினாள்.  நாயனம் நீண்ட ஸர்ப்பமாகி, அவளது யோனியை ஒரு முறை தீண்டித் திரும்பியது.  இது கண்ட தவில்காரர் இடுப்பை முன் நெறித்து அவளை நோக்கி ஓரடி வைத்து வந்தார்.  ஸ்திரிபார்ட்டோ தன் அந்தரங்கத்தை தவிலுக்குக் காட்டுவது போல, ஒரு காலைத் தூக்கி விசிறி தரையில் குதித்தாள். பின்பு சிரித்த படி, மறுமுனைக்கு ஓடிப்போனாள். 

மறுமுனை முன்வரிசையில் சிறுவர்களே உட்கார்ந்திருந்தனர்.  அவர்களுக்குள் ஒளிந்திருந்த பபூன் ஸ்திரிபார்ட்டின் கால்களுக்குள் புகுந்து மறுபக்கமாய் வெளியேறினான்.  அவளணிந்திருந்த குட்டைப் பாவாடை தலையைத் தடுக்கியது.  திகைத்தது போல் நடித்து, அவனைக் கெட்ட வார்த்தையால் திட்டினாள் அவள்.  கூட்டம் இப்பொழுது ஒரு கொதி கொதித்து சிரிப்பாய் வழிந்தது.

ஸ்திரிபார்ட்டின் காலுக்குள் புகுந்து வந்த பபூன், மூக்கை பொத்திக் கொண்டு, புளிப்பான எதையோ சப்பியதைப் போல 'அய்யே..' என்று உதட்டைக் கோணிக் காட்டினான்.  இதைப் பார்த்த ஸ்திரிபார்ட் அவனை அடிக்க ஓடி வந்தாள்.  'வாடா, வாடா'.  அவளிடமிருந்து தப்பிக்க, இப்பொழுது பபூன் கிறு கிறுவென்று சுற்றி ஆடத்துவங்கினான்.  கூட்டம் இப்பொழுது தள புளவென்று சத்தம் போட்டது.   

பபூன் கிறுக்கியாடிய படியே இருந்தான்.  ஸ்திரிபார்ட் அவனைத் தொடத் தொட பாய்ந்தாள்.  அருகில் கூட நெருங்கமுடியவில்லை.  அவ்வளவு வேகமாக கிறங்கினான். தொட முடிந்தால் அவள் அடிக்கக் கூடும் என்பது அவனுக்குத் தெரியும்.  அதனால் ஆடுவதை நிறுத்தப் பயந்தான். 

இதனிடையே ராஜபார்ட் இன்னொரு பக்கம் சிரத்தையாய் மணிக்குறவன் கதையைப் பாடி முடித்துக் கொண்டிருந்தார்.

முடித்ததும் தான் தாமதம், பபூனும் ஸ்திரிபார்ட்டும் தங்களது உரையாடலை ஆரம்பித்தனர்.  இரண்டு பேரும் நாயனக்காரரை 'மாமா, மாமா' என்றே அழைத்தனர்.  பபூனுக்கு வளையாத குழலொன்று வாங்குவதற்கு ஸ்திரிபார்ட் நாயனத்திடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.  பபூன் தனது பழைய குழலே வாசிக்க ஏற்றது தான் என்று சாதித்துக் கொண்டிருந்தான்.  ஒட்டு மொத்த கூட்டமும் இதில் வெளிப்பட்ட அர்த்தங்களை கண்டுபிடித்த சந்தோசத்தில் கூத்தாடிக்கொண்டிருந்தது. உரையாடலும், ஆட்டமும் பாட்டமுமாக போய்க்கொண்டிருந்தது தெருக்கூத்து.

இதன் நிகழ்த்துப் பனுவல் ஆகச்சிறந்த நெகிழ்வுத்தன்மை உடையது.  சாமியாடும் மனைவி' என்ற நகைச்சுவைக் கதையே இதன் மையச் சரடு.   மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை.  எசலிப்பு.  தன் உடம்பில் சாமி வருவதால் இனிமேல் வீட்டு வேலைகளைத் மாமியார் தான் செய்ய வேண்டும் என்பாள் மருமகள். உடனே மாமியார், 'அது சாமி அல்ல பேய்' என்று சொல்லி, பேயோட்டுகிறவனைக் கூட்டி வருவாள்.  பேயோட்டுகிறவனின் அடிக்குப் பயந்து மருமகள் உண்மையை ஒத்துக் கொள்வாள்.  இவ்வளவு தான் கதையே.  இதைத் தான்  விடிய விடிய நடத்துவார்கள்.  இடையிடையே  பல்வேறு  மணிக்குறவன் கதை, இம்மானுவேல் சேகரன் கதை, பசும்பொன் முத்துராமலிங்கம் கதை, தனுஷ்கோடி புயல், மதுரை சுற்றளவு என்று சின்னச் சின்னக் கதைப்பாடல்களை சேர்த்துக் கொள்வார்கள்.  போதாக்குறைக்கு பபூனுக்கு நாயனம் வாங்குவது போன்ற உரையாடல்களும் உண்டு.  இவ்வளவையும் அனுமதித்த படி, தன்னையொரு கதம்பமாக மாற்றிக் கொண்டிருக்கிறது குறவன் குறத்தியாட்டம்.

பபூன் பஞ்சாயத்து முடிந்ததும், ஒரு பாட்டு தான் பாடியிருப்பார்கள், அதற்குள் யாருக்கோ மீண்டுமொரு முறை மணிக்குறவன் மாண்டகதை ஞாபகம் வந்து விட்டது.  பாடு என்றார்கள்.  கலைஞர்கள் சளைக்காமல் மீண்டும் பாடினார்கள். 

இப்படியே, அந்த இரவில் மட்டும் ஏழு முறை மணிக்குறவன் மாண்ட கதை பாடப்பட்டது.   மணிக்குறவன் டிரைவரை வெட்டிக் கொன்றதில் எதைப் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை, அந்தக் கட்டத்தைப் பாடும் போது மட்டும் விசில் பறந்தது.  ஆட்டம் பார்க்க உட்கார்ந்திருந்த ஒன்றிரண்டு நாயக்கர்களும் இதைக் கண்டு, ‘என்னல இது, ஒரே பாட்ட திரும்பத் திரும்ப பாடிக்கிட்டு' என்று முனங்கிய படி எழுந்து வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். 

கூட்டத்திடம் இரண்டு மடங்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.  இப்படித்தான் அன்றைய தினம் அந்த கூத்து நடந்து முடிந்தது.

ஒடுக்கப்பட்டவர்கள், தங்களது மானுட அடையாளம் மறுக்கப்பட்ட சூழல்களில், பாலியல் மற்றும் அரசியல் மூலமாக அவ்வடையாளத்தை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்; அதற்குக் கலைகள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதை அன்றைக்குத் தான் நான் நேரில் பார்த்தேன். 

அன்றைக்கு அவர்கள் ஆயுதம் எதுவும் ஏந்தி நின்றது போல எனக்குத் தெரியவில்லை.  

முற்றும்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக