Skip to main content

இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை?



முன் கதைச் சுருக்கம்:

பெருஞ்சமூகத்தில் மத அடிப்படைவாதம் வாழ்க்கையாக இருக்கிறது என்றால், அதற்கு எதிரான வாழ்கையை வாழ வாய்ப்புகளை வழங்குவதே கல்வி நிலையங்களின் பணியாக இருக்கிறது.  அதே போல், சாதிப் பாகுபாடுகளற்ற கற்பனையான சூழலை உருவாக்கி காட்டுவதும் அதன் பணியே.,  மனிதர்களை அவர்களது சிந்தனையாலும் செயலாலும் மட்டுமே அடையாளப்படுத்துகிற வாழ்க்கையொன்றை நிர்மாணிப்பது,   பொருளாதாரக் காரணிகள் வலுவிழந்த சமூக உறவுகளை கட்டமைப்பது போன்றவையும் கல்வி நிலையங்களின் வேலை தான்.  நேரடியாய் உணவு உற்பத்தியால் பாதிக்கப்படாத வாழ்க்கைச் சூழலை கல்வி நிலையங்களே ஏற்படுத்தித் தரமுடியும். 
இந்தச் சூழல்கள் அனைத்தும் கற்பனையானவை தான்!  நிஜமல்ல தான்!  ஏட்டுச் சுரைக்காய் தான்!  விளைச்சல் வீடு வந்து சேராத வெள்ளாமை தான்!  ஆனால், ஒரு நல்ல பள்ளிக்கூடம் இதைச் செய்வது தான் நியாயம். 
JNU அதைச் செய்திருந்தது.

இனி.... 

ஒரு முன்மாதிரியான கல்வி நிலையத்தை, பௌத்த பள்ளிகள் மற்றும் சங்கங்களோடு ஒப்பிட முடியும்.

அவை எப்பொழுதுமே சமூக விதிகளுக்கு புறம்பானவை.  இலட்சியவாத ஒழுக்க விதிகளை வலிந்து வாழ்ந்து காட்டுபவை; அவ்வாறு வாழ்ந்து காட்டுவதன் மூலம், சமூகத்தை தொடர்ச்சியாக இடித்துரைப்பவை. அதனாலேயே சமூகத்தின் கிண்டலுக்கு இலக்கானவை (அவனா? அவன் வினயம் புடிச்சவன்லா!)  அவை எழுப்பும் கேள்விகள் சங்கடமானவை. 'மனசாட்சி' கதையை நம்புகிறவர்களாக இருந்தால், இவை சமூகத்தின் மனசாட்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நேர்மையான கல்வி நிலையங்கள் இது போன்ற அனுபவங்களையே மாணவர்களுக்கு வழங்குகின்றன.  90களின் ஜேயென்யுவில் இத்தகைய அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. 
 
எனக்குத் தெரிந்து எந்தவொரு தமிழகக் கல்வி நிறுவனத்திற்கும் இந்த குணங்கள் இருக்கவில்லை.

பெரும்பான்மை இந்தியக் கல்வி நிறுவனங்கள் ஒரு விசித்திரமான குழப்பத்தின் மீது கட்டப்பட்டுள்ளன.  அவை தங்களை தொழிற்சாலைகளாக நினைத்துக் கொண்டு அட்டகாசம் பண்ணுகின்றன.  கசடுகளோடு கிடைக்கிற மாணவர்களைக் கழுவித் துடைத்து, பவுடர் பூசி, பொட்டு வைத்து, மேட்டிமை குணம் கொண்டவர்களாக வெளியே அனுப்புவதே தங்களது ஒரே நோக்கம் என்று அவை கூசாமல் சொல்கின்றன.  ராட்சச வாசிங்க்மெசின்கள்!!! 

இதில் அரசு, தனியார் என்ற பேதங்கள் எதுவும் இல்லை.  சமச்சீரான வாசிங்க்மெசின்கள்.
 
பாளையங்கோட்டை மாதிரியான காலனிய நகரமொன்றின் கிறிஸ்தவ கல்விக்கூட சூழலிலிருந்து சென்றிருந்த எனக்கு ஜேயென்யு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.  கிறிஸ்தவ கல்விக் கூடங்களின் நடைமுறைகளை அறிந்திருப்பவர்களுக்கு நான் சொல்வதன் முழு அர்த்தமும் விளங்கக்கூடும்.  கிறிஸ்தவ கல்விக்கூடங்கள், காலனியத்தின் மனிதாபிமான முகம்.  அதிலும், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்விக்கூடங்கள் காலனியத்தின் புனித முகம்!  கருணையே அதன் கொடுவாள்.  அன்பை கூட மார்பில் தைக்கிற வகையில் தான் அது செலுத்தும்! அதில் படித்த நிறைய பேருக்கு, ஒரு ஜோடி வெறித்த கண்களும், கைகளை பின்புறமாகக் கட்டி விறைத்த உடலும் (இதைப் பாதிரியார் என்கிறார்கள்!) கனவில் வரும் தொந்தரவு நிச்சயம் இருக்கும்.

ஜேயென்யு இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது
அது ஏதோ முடிவேயில்லாத சிறுபத்திரிகைக் கூட்டங்களைப் போல இருந்தது.  24X7  நீங்கள் பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும்,  விவாதித்துக் கொண்டும் இருக்க முடியும்.  வளாகத்தின் நட்ட நடுவில் ஒரு ஒன்பதடுக்கு நூலகம் உண்டு.   The Library of Babel வாசிக்க உகந்த இடம் அது தான்.  பேசாமல் அங்கேயே போய் குடியிருந்து கொள்ளலாம் போல இருக்கும்.  அப்படித்தான் இருந்தோம்.  நிறைய நாட்கள் தூங்குவதற்கு மட்டும் தான் விடுதிக்கு வருவோம். 
 
இது போதாதென்று தீன்மூர்த்தி நூலகமும் தில்லியில் இருந்தது.
தீப்பெட்டி ஆபிஸிற்கு பெண் பிள்ளைகள் போய் வருவது போல அந்நூலகத்திற்கு போய் வருவோம்.  அதிகாலையில் யென்யு பேருந்து ஒன்று எங்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு போய் தீன்மூர்த்தி நூலகத்தில் விட்டுவிட்டு வரும். பின்பு, மாலை ஏழு மணி போல அதே பேருந்து திரும்ப கூட்டிக்கொண்டு போய் ஜேயென்யுவில் விட்டு விடும்.

அது ஒரு அற்புதமான நூலகம்.  நீங்கள் தேடுகிற புத்தகங்கள் அனைத்தும் கையருகே கிடைப்பது என்றால் என்ன ஒரு வரம்?  ஆனால், தீன்மூர்த்தி நூலகத்தில் நாம் கேள்விப்பட்டிராத புத்தகங்கள் கூட கிடைக்கும்.  தாஸ்தாவேஸ்கி தன்னுடைய ஒவ்வொரு நாவலுக்கும் தயாரித்து வைத்திருந்த குறிப்பேடுகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டிருப்பதை நான் அங்கு தான் வாசித்து முடித்தேன்.  Note books for Crime and Punishment, Note books for Notes from the Underground, Note books for The Brothers Karamazov.  

புத்தகங்கள் வழி மட்டுமே அறிந்திருந்த பலரையும் ஜேயென்யூவில் நேரடியாய் பார்க்க முடியும்.  பேச முடியும்.  அப்படித்தான் ரொமிலா தாப்பரையும் ழாக் தெரிதாவையும் அங்கே சந்திக்க முடிந்தது.  நான் அங்கு ஆறு ஆண்டுகள் வாழ்ந்தேன்.  அந்த ஆறு வருடங்களும் ஏதோவொரு நீண்ட கலை, இலக்கிய பயிற்சி பட்டறையில் இருப்பது போலவே நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வகையில் ஜேயென்யு மாயச் சுழல்.  போதையின் உச்சம். 
1998ல் நான் அதை விட்டு வந்து விட்டேன்.  ஆனால், சமீபகாலம் வரை அது குறித்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.  ஏதாவதொரு தேவதை என் முன் வந்து நிற்கும்.  'நீ  உன் வாழ்க்கையின் எந்த காலகட்டத்தை திரும்ப வாழ ஆசைப்படுகிறாய்?' என்று கேட்கும்.  'ஜேயென்யூ தான்...' என்று நான் சொல்வேன்.  இப்படி கூட கற்பனை செய்திருக்கிறேன். 

இந்த மயக்கத்திற்கு ஜேயென்யு மட்டுமே காரணம் இல்லை என்று இப்பொழுது தோன்றுகிறது.  அதை விட்டு வெளியே வந்த பின்பு, வெளியுலகம் தந்த அய்ற்சியும் கூட ஜேயென்யுவை இந்தளவு விரும்பக்கூடிய சொர்க்கமாக்கியிருக்கிறது.

ஆனாலும், அது ஒரு கனவு தான்.  அதற்குள் சக்கரவியூகமொன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் நான் சொல்வேன்.  அவ்வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதும் கடினம்.  உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதும் கடினம்.  அது பலி கொண்ட ஏராளமான அபிமன்யுக்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.  மிக மிக சொற்பமானவர்களே அதை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள்.  பல பேர் அது என்ன மாதிரியான வியூகம் என்று அறியாமலேயே வீரமரணமும் அடைந்திருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு போதையானது ஜேயென்யு!

இது ஜேயென்யூவிற்கும் நன்றாகத் தெரியும்.  இது குறித்து சொல்லிச் சொல்லி தேய்ந்து போன ஒரு ஜோக் கூட உண்டு. 

கிளை கதை


ஜேயென்யூவில் ஆளரவமற்ற ரிங்க் ரோடு ஒன்று இருக்கிறது.  நூலகம், அலுவலகம், பள்ளிக்கட்டிடங்களை சுற்றிக்கொண்டு அது ஓடுகிறது. 

அதிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குப் பாதையை பிடித்தால் தான் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முடியும்.  ஆனால், அந்தக் குறுக்குப் பாதையோ குழப்பத்தால் செய்யப்பட்டிருந்தது.  புதுசாய் வருகிறவர்களுக்கு மண்டை காயும்.  ஒரு முறை குழம்பி விட்டால் அவ்வளவு தான்.  வழி கண்டுபிடிக்க முடியாமல் சுத்தி சுத்தி வந்து கொண்டிருப்பார்கள். 

ஒரு நாள்,  இப்படித் தான் ஒரு அப்பாவி மாட்டிக் கொண்டார்.
இரண்டு, மூன்று மணி நேரம் ஆகி விட்டது.  வெளிய போற வழியை காணோம். 
 
நிறைய பேரிடம் வழி கேட்டு விட்டார்..  எல்லோரும் பொறுப்பாகத் தான் பதில் சொன்னார்கள்.  ஒவ்வொருவர் வழி சொல்லிக் கேட்கும் போதும் 'அட, ஈஸி!' என்று தான் இருந்தது.  ஆனால், போய் பார்த்தால் தான் கண்ணைக் கட்டி ஜேயென்யுவில் (காடு தான்! இதிலென்ன சந்தேகம்?) விட்டது போல் இருக்கிறது.  அதே பாதை, அதே கட்டிடங்கள்!  இப்படியே ஒரு முப்பது நாற்பது முறையாவது அந்த ரிங் ரோட்டிலேயே அவர் கிரிவலம் வந்திருப்பார். 
 
கடைசியில் வெறுத்துப் போனார்.  அழுகை அழுகையாக வந்தது.  வராதா பின்ன? அவருக்கும் ஆயிரம் ஜோலிகள் இருக்கும் தானே!   ஒரு நவநாகரீக இந்திய பிரஜை, அதன் தலைநகரத்திலேயே, இப்படியொரு பல்கலைக்கழகத்திற்குள் வந்து சிறைப்பட்டார் என்றால், அதை என்னவென்று சொல்வது?

இறுதியிலும் இறுதியாய் யாரையாவது உதவிக்கு அழைப்பது என்று முடிவு செய்தார்.  இந்த முறை வழி மட்டும் கேட்டால் போதாது.  அந்த நபரையே துணைக்கு வந்து வழியைக் காட்டும் படி கெஞ்ச வேண்டும்.  கூத்தாடியாவது அவரை அதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.   அவருடைய அதிர்ஷ்டம் போல அந்த நேரம் அங்கே ஒரு மாணவர் நடந்து வந்து கொண்டிருந்தார். 
 
நம்ம ஆள், அந்த மாணவரை நிறுத்தினார். 
 
'மூணு நாலு மணி நேரமா இந்த ரிங்க் ரோட்டையே சுத்திட்டிருக்கேன் தம்பி. வெளிய போறது எப்படினு தெரியல!  வசமா வந்து மாட்டிக்கிட்டேன்.  தயவு பண்ணி நீங்க எங்கூட வர முடியுமா? வந்து வழி காட்டமுடியுமா?'  அவர் வாய் விட்டு அழ மட்டும் தான் இல்லை. 

இதைக் கேட்ட அந்த மாணவர் இன்னும் பரிதாபமான குரலில் இப்படி சொன்னாராம்: 

'அண்ணே, நான் படிக்கேனு வந்து பத்து வருஷம் ஆகுது. வெளியப் போறது எப்படினு தான்ணே நானும் சுத்திட்டிருக்கேன்!  வாங்கண்ணே, சேந்து தேடுவோம்'.

மூலக்கதை தொடர்கிறது...


மாற்று சிந்தனைகளுக்கான வெளிகளை ஜேயென்யு தைரியமாக அமைத்துத் தந்தது.  இதையே தனது தனித்தன்மையாகவும் அது சொல்லிக் கொண்டிருந்தது.  நிஜம் தான்.  அங்கிருந்த வாழ்க்கை முறை வெளியுலகிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.  ஆனால், வெளியுலகைப் பொறுத்த வரையில் இது நிஜமான வாழ்க்கையில்லை. 

ஆனால், கல்வி நிலையங்கள் இந்த மாற்று வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தான் அதன் இருப்பிற்கான நியாயம் என்று நினைக்கிறேன். அவை, சமூகத்தின் எதிர் குரல்கள்; மாற்று வடிவங்கள். இந்தத் தெளிவு இல்லாதவர்கள், அது தரும் போதையில் மதி மயங்குகிறார்கள்.

ஜேயென்யு பற்றிய இந்த்த் தெளிவு எனக்கு உடனடியாகவெல்லாம் வந்துவிடவில்லை.  அதற்கு ஆச்சு வெகுகாலம்.

சுயபுராணம்...


அப்பாவுக்கு மாட்டுக்கறியே ஆகாது.   

அவருடைய மாட்டுக்கறி விரோதத்திற்கு சாதியபிமானம் காரணம் இல்லை. ஏனென்றால் சாதிக்கதைகளை அவர் நம்புவது இல்லை.  தேவேந்திரன், விவசாயம், மாடு என்று சொல்லக்கூடிய புராணத்தை அவர் நல்லதொரு கதையாகக் கூட அங்கீகரித்தது இல்லை.  நிறைய ஓட்டை இருக்கிறது; எனவே இது கதையே இல்லை என்பார்.  ஆனாலும், மாட்டுக்கறி அவருக்கு ஆகாது. 
 
அம்மாவின் சமையல் மரபில் மாட்டுக்கறி இல்லை.  எனவே சமைக்கத் தெரியாது;  சாப்பிடவும் தெரியாது.  இதனால் எங்கள் வீட்டில் மாட்டுக்கறி சமைக்கப்பட்டது இல்லை. 
 
தம்பி விளையாட்டு வீரன்.  மாட்டுக்கறி சாப்பிட்டால் தான் ஸ்டாமினா வருமென்று ஏதோவொரு கோச் அவனிடம் சொல்லியிருக்கிறார்.  அதனால் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.  அவனுக்காக ஒரே ஒரு முறை மாட்டுக்கறி வாங்கி வீட்டில் ரகசியமாய் சமைத்தார்கள்.  மாட்டுக்கறியை சமைக்கும் நளபாகம் கை வராததால், அதற்கப்புறமாய் அவன் பிடிவாதம் பிடிக்கவே இல்லை.
 
சிறுவயதில் நானும் தம்பியும் அப்போதைக்கப்போது அம்மாவிடம் நச்சரித்திருக்கிறோம்.  'அம்மா, மாட்டுக்கறி எடுக்கலாம்மா..'.

அம்மா சம்மதிச்சதே இல்லை.  பதிலுக்கு, 'போயேன், போய் ஒங்க ஆத்தா வீட்டில சாப்பிட்டுக்கோயேன்!' என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.

அது ஒரு தனிக்கதை.

ஆத்தா வீட்டுக்கதை


எங்களுக்கு ஒரு ஆத்தா வீடும் இருந்தது.  அந்த வீட்டில் அப்பா வழி தாத்தாவும் ஆத்தாவும் இருந்தார்கள்.  ஆத்தா என்பது அப்பாவுக்கு சித்தி, எங்களுக்கு சின்ன பாட்டி.  நான் 'ஆத்தா, ஆத்தா' என்று கூப்பிட்டு, அந்த வீடு எல்லோருக்கும் 'ஆத்தா வீடு' ஆகி விட்டது.
  
ஆத்தாவின் உறவினர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.  பெரிய பாட்டி இறந்ததும் தாத்தா, ஆத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அந்த காலத்தில் அது பெரிய சாகசம். 
 
ஆனால், வளர்ந்து தனி மரமாக நின்ற அப்பாவுக்கு மட்டும் இதில் கொஞ்சமும் சம்மதமில்லை.  தாத்தா செய்தது அநியாயம் என்றார். சின்னாத்தாள் கொடுமைக்குள் தன்னைத் தள்ளி விட்டார் என்று பெரும் மனவருத்தம் கொண்டிருந்தார்.  இதனை நிரூபிக்க அவரிடம் ஒரு பாட்டம் சான்றுகள் இன்றளவும் உண்டு.  தாத்தாவின் இறுதிக்காலம் வரை அந்தக்காதலை அவர் அங்கீகரிக்கவேயில்லை.

அதனால், தான் வேறு தனது சித்தி குழந்தைகள் வேறு என்பதை அவர் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டே இருந்தார்.  எல்லா வகையிலும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தார்.  இதனால் அவர் சொந்த பந்தங்கள் யாருமற்ற அனாதையாகக் கூட வாழ வேண்டியிருந்தது.  ஆனால் அதற்கெல்லாம் அவர் அசரவேயில்லை.  இன்று வரை தனது விரதத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்.  அதில் ஒன்று தான், மாட்டுக்கறி மீதான அவரது விரோதமும்.  மாட்டுக்கறியை அங்கீகரிப்பதும் தனது அப்பாவின் காதலை அங்கீகரிப்பதும் ஒன்றே என்று அவர் மிகத்தீவிரமாய் நம்பினார்.

எனது குழந்தைப் பருவம் முழுவதும் ஆத்தா வீட்டில் தான் கழிந்தது.  அந்த வீட்டில் தான் விளையாடுவதற்கான நண்பர்களும், ஒளிந்து கொள்வதற்கான இண்டு இடுக்குகளும், வேகமாய் ஓடித் திரும்பி சாடுவதற்கான முடுக்குகளும் அதிகம் இருந்தன.  குழந்தைப் பருவத்தில் இதை விட ஆடம்பர வசதிகள் வேறு என்ன வேண்டும்?  இதற்கெல்லாம் மேலே ஒரு செர்ரி பழ மரமும் ஆத்தா விட்டில் இருந்தது. போதாதா என்ன?

இதனால் நான் ஆத்தா வீட்டில் தான் பழியாகக் கிடந்தேன்.  அங்கேயே சாப்பிடுவேன்; அங்கேயே தூங்குவேன்; அப்படியே பள்ளிக்கூடத்திற்கும் போய்வருவேன்.  எவ்வளவு தூரம் அங்கேயே இருந்தேன் என்றால், என் பெயரைக் கூப்பிட்டு கூப்பிட்டு 'தம்மாச்சி' என்று தேய்க்கிற அளவுக்கு அங்கேயே இருந்தேன்.  அதனால் தான் ஒவ்வொரு முறை நான் மாட்டுக்கறி பற்றி கேட்கும் போதும் அம்மா என்னை 'போய் ஒங்க ஆத்தா வீட்ல சாப்டுக்கோ' என்று சொல்லி மறுத்து விடும். 
 
ஆனால், இந்தக் கதைக்கு எதிர்பாராத திருப்பம் ஒன்றும் உண்டு.  ஆத்தா வீட்டிலும் மாட்டுக்கறி சமைப்பதில்லை. 
 
இந்த விஷயத்தை நிச்சயமாய் நான் எதிர்பார்க்கவில்லை.  தாத்தாவின் காதலுக்காக ஆத்தா மாட்டுக்கறி சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட்டதாம்.  ஒரு வேளை தாத்தா தான் மிரட்டி சாப்பிடக்கூடாது என்று தடை போட்டு விட்டாரா என்றொரு சந்தேகம் கூட எனக்கு இருந்தது.  இதை ஆத்தாவிடமே கேட்டிருக்கிறேன்.

'போல தூர!  ஏன் உங்க அப்பன் பாத்துட்டு வரச்சொன்னானோ?' என்பது தான் ஆத்தாவின் பதில்.

ஆனால், இன்று வரையில் ஆத்தா விட்டில் மாட்டுக்கறி சமைக்கப்பட்டதே இல்லை என்பது தான் உண்மை.  ஆனால், அப்பாவும் அம்மாவும் இதை இன்னமும் நம்பவில்லை. 
 
'பொய் பேசாத...'

'இல்ல... அது தான் உண்மை.  எனக்கு நல்லா தெரியும்...'

'ஆமா உனக்கு நாலும் தெரியும்.  அவுகளோட சேந்துகிட்டு நீயும் பொய் சொல்லாத.'

காதலுக்காக செய்யப்பட்ட தியாகத்திற்கு இவ்வளவு தான் மரியாதை இருந்தது.

ஜேயென்யூவில் மாட்டுக்கறிச் சோறோடு ஆய்வரங்கங்களை நடத்துவதற்கும் எங்கள் வீட்டு சமையலறையில் மாட்டுக்கறி சமைப்பதற்குமான வேறுபாடுகளை நான் இப்படித்தான் உணர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

மாட்டுக்கறியை வெளியே எங்கு வேண்டுமானாலும் நான் சாப்பிட்டுக் கொள்ளலாம்.  ஆதரித்துப் பேசலாம்; எழுதலாம்.  ஆனால், வீட்டிற்கு எடுத்து வருவது மட்டும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஹோட்டல்களுக்குப் போனால் மாட்டுக்கறியை வரவழைத்து கூட நான் சாப்பிட முடியும்.  அந்த நேரங்களில் என்னருகே அமர்ந்து சாப்பிடுவதில் வீட்டுக்காரர்க்ளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.  ஆனால், எங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் மாட்டுக்கறி சமைப்பது இல்லை. 
இது என்ன மாதிரியான பிரச்சினை?  வீட்டு சமையலறைகளுக்கும் மாட்டுக்கறிக்கும் அப்படி என்ன விரோதம்?

ஒரு இந்திய சமையலறையில் மாட்டுக்கறி ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு பதிலாக ஏராளமான புராணக்கதைகள் தான் சொல்லப்படுகின்றன.  அந்தக் கதைகளனைத்தும் மாடு புனிதமானது என்ற வாதத்தையே திரும்பத் திரும்பச் சொல்கின்றன.  அந்த வாதங்கள் சொல்லப்படும் முறையைப் பார்த்தால், அதில் சொல்பவர்களுக்கே கூட பூரண நம்பிக்கையில்லையோ என்றும் கூட நமக்கு சந்தேகம் வரும். அப்படிச் சொல்கிறார்கள்!

இந்த விஷயத்தில் அம்பேத்கர் ஒரு கேள்வி கேட்கிறார்.  மாடு, அதுவும் பசு மாடு, அவ்வளவு புனிதமானது என்றால், அதன் பாலை மட்டுமல்ல, அதன் இரத்த்த்தையும் தசையையும் புனிதப் பொருட்களாக பாவித்து உண்பது தானே சரியாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.  புனிதம் என்று அறிவிக்கப்பட்ட அனைத்தையும் மனித இனம் இப்படித்தான் கொண்டாடி வந்திருக்கிறது.  அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் புனிதமாகக் கருதும் கிறிஸ்தவர்கள் அவற்றை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் உண்டு விடத் தானே செய்கிறார்கள்?

இந்தியாவிற்குள் மதம் போதிக்க வந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் இந்த மாட்டுக்கறி ஒரு பாட்டம் போட்டுத் தான் பார்த்தது.  மாட்டுக்கறி உண்கிறார்கள், சாராயம் குடிக்கிறார்கள், சேரி மக்களுடன் உறவாடுகிறார்கள் எனவே ஐரோப்பிய மிஷனரிகளும் அவர்களுடைய மதமும் தீண்டத்தகாதவைகள் தான் என்பதே மதுரை மீனாட்சியம்மன் கோவில் பூசகர்களும், பட்டர்களும் சொன்ன குற்றச்சாட்டுகள். 

இதனை முன்னிட்டு ஐரோப்பியர்களுக்கு ஒரு வசைப் பெயரைக்கூட அவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள் - பறங்கி!  இந்த முள்ளை முள்ளாலேயே எடுக்கப் பார்த்த கதை தான் தமிழகக் கிறிஸ்தவர்கள் இன்றைக்கு வரைக்கும் மெச்சிக் கொள்ளும் 'தத்துவ போதகர்' ராபர்ட் டி நொபிலியின் விர வரலாறு!

மாட்டுக்கறியை பிரதானமாக உண்ணும் ஆங்கிலேய அதிகாரிகளிடம் உறவாடுவதில் இந்திய உயர் சாதியினருக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. அவர்களைத் தொடுவதற்கும், அவர்களால் தொடப்படுவதற்கும் என்றைக்குமே கூச்சப்பட்டதில்லை.  ஒரு படி மேலே போய் அவர்களால் தொடப்படுவதற்கு மோகம் கூட கொண்டார்கள்.  ஆனால், தங்களது சமையலறைகளுக்குள்ளும், பூஜையறைகளுக்குள்ளும் ஐரோப்பிய வாசனை வருவதை இந்திய சமூகம் விரும்பாமலேயே இருக்கிறது.

இந்த மாறுபாட்டை இன்றைக்கும் நம்மால் பார்க்க முடியும்.  பெருவாரியான இந்தியர்களுக்கு மாட்டுக்கறியை சாப்பிடுகிறவர்கள் மீது பெரும் பிராது ஏதும் இல்லை.  தத்தம் வீட்டின் அடங்காப்பிடாரி ஆண்கள் வெளியே போகிற இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடுவதை பெரிய மனதோடு சகித்தும் கொள்கிறார்கள்.  ஏராளமான உயர் சாதி ஆண்கள் விடுதிகளில், விருந்துகளில், சாலையோரக்கடைகளில் மாட்டுக்கறி சாப்பிட்டு சாகசம் படைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  ஆனால் அவர்கள் சமையலறைக்குள் மட்டும் மாட்டுக்கறிக்கு இடமில்லை.

மாட்டுக்கறி பற்றிய விவாதங்கள் நடந்த பொழுது, 'நானெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை தான்.  ஆனால், மாட்டுக்கறி உண்பவர்களை நான் ஆதரிக்கிறேன்' என்று நிறைய பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.  இதற்கு 'சகிப்புத்தன்மை' என்றொரு பெயரையும் அவர்கள் சூட்டியிருக்கிறார்கள். 
 
என்னுடைய பிரச்சினையெல்லாம் இந்த சகிப்புத்தன்மை பற்றியது தான்.  எங்கிருந்து தோன்றுகிறது இந்த சகிப்புத்தன்மை?  இந்த சகிப்புத்தன்மையின் மூலமாக அவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள்?  மாட்டுகறியைப் புறக்கணிப்பது தான் தங்களது மரபு என்று சொல்ல வருகிறார்களா?

இந்திய நிலவுடமை சமூகங்களின் உள்கட்டமைப்புகளை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பூமணி எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவல் இந்த விஷயத்தில் சில தெளிவுகளை நமக்கு ஏற்படுத்துகிறது.  அந்த நாவலில் வேளாண் சமூகத்தைச் சார்ந்த ஒரு நபர் எவ்வாறு உருவாக்கப்படுகிறார் என்ற விவரணை அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  விடலை என்ற பருவத்திலிருந்து குடும்பன் என்ற அந்தஸ்தை ஒரு மனிதன் எட்டுகையில் அடையக்கூடிய மனப்போராட்டங்கள் அதில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.  அதில் உணவுப் பழக்கவழக்கம் தான் பிரதானமாகக் காட்டப்பட்டிருக்கிறது.  இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு புதுவிசை எண் - 44ல் நான் எழுதிய 'விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி' என்ற கட்டுரையை படிக்கலாம்.  (என்ன ஒரு விளம்பரம்?)

வேளாண் சமூகங்கள் உணவை இரண்டாக வகைப்படுத்திக் கொள்கின்றன.  காட்டு உணவு, வீட்டு உணவு.  இதில் வீட்டு உணவை, அதாவது சமையலறைகளில், தத்தம் குடும்பப் பெண்களால் சமைக்கப்படும் உணவை நாகரீகத்தின் உச்சம் என்பதாக அது விளம்பரப்படுத்துகிறது. 
காட்டு உணவு, சேகரித்து உண்ணப்படுவது; பகிரங்கமாக உண்ணப்படுவது; பழைய பழக்குடியின ஞாபகங்களைக் கொண்டது.  எனவே புறக்கணிக்கப்பட வேண்டியது என்ற கருத்தாக்கத்தை வேளாண் சமூகங்கள் ஆணித்தரமாய் நம்புகின்றன.  இதற்கு எதிரிடையாக, வீட்டு உணவு, அடுக்களையில் சமைக்கப்படுவது; அந்தரங்கமாக தயாரிக்கப்படுவது, அந்தரங்கமாகவே உண்ணப்படுவது; எனவே நவீனமானது என்றும் நம்புகின்றன.

இந்த 'அந்தரங்கம் - பகீரங்கம்' என்ற எதிர் நிலைகளில் நிலவுடமை சமூகம் அந்தரங்கத்தையே நாகரீகம் என்று அழைக்கிறது.  உணவு அந்தரங்கமானது!  ஒரு இந்திய குடும்பத்தின் சமையலறைக்குள் நுழையும் அனுமதி அன்னியோன்யத்தைக் காட்டக்கூடியது.  அதே போல் இன்னொரு அந்தரங்கம், கடவுள் வழிபாடு!

நிலவுடமையின் உயிர் கட்டக்கடைசியாய் சமையலறைகளிலும் பூஜையறைகளிலும் தான் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.

சமையலறைகளில் தயாரிக்கப்படாத எந்த உணவையும் நிலவுடமை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை; அதே போலத்தான், பூஜையறைகளில் அல்லது கோவில்களில் பேசப்படாத எந்தவொரு கடவுள் பற்றிய பேச்சும்.
நீங்கள் விருந்துகளில் எந்த வகையான உணவையும் உட்கொள்ள முடியும்.  விடுதிகளில் மாட்டுக்கறி சாப்பிட்டுக்கொள்ளலாம்.  ஆய்வரங்கங்களில் பறிமறிக்கொள்ளலாம்.  வீதிகளில் மாட்டுக்கறி திருவிழா கூட நடத்த முடியும்.  அதையெல்லாம்  நிலவுடமை சமூகம் பெரிய மனதோடு சகித்துக்கொள்கிறது.  இதுவெல்லாம் விடலைத்தனம் என்று அது தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்கிறது.

இதே போல, அரங்கங்களில் நீங்கள் நாத்திகம் பேசிக் கொள்ளலாம்.  கடவுளை மறுத்து வீதிகளில் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.  பிள்ளையார் சிலையை உடைக்கலாம்.  இவையனைத்தையும் நிலவுடமை சகித்துக்கொள்ளத் தயாராகவே இருக்கிறது.  ஏனெனில் இதையும் அது விடலைத்தனம் என்றே அழைக்கிறது. 
 
தனது ஆன்மா குடும்பத்திற்குள் இருப்பதை அது நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.  அந்த ஆன்மாவை காப்பாற்றும் பொறுப்பை பெண்களிடம் தந்திருப்பது தான் அதனுடைய ராஜதந்திரம்!

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் கவிஞர் ரஸூல் இஸ்லாம் நோக்கி கேட்ட அதே கேள்வியை நாமும் கேட்டுப்பார்க்கலாம்.  ஏன் நம்மிடம் பெண் சித்தர்கள் இல்லை? நமது சமூகப் புரட்சிகள் அனைத்தும் மிதமிஞ்சிய ஆண் நெடி அடிக்கிறதே ஏன்? 

இதற்கு மிக எளிய பதில் தான் இருக்கிறது - இதுவெல்லாமே விடலைத்தனமாக மட்டுமே தேங்கிப் போயின; விடலைத்தனம் ஆண்களின் பருவம்!

இந்தச்சூழலில், மாட்டுக்கறியை சாப்பிடுவது, அதைப் பெருந்தன்மையோடு சகிப்பது, வீதிகளில் போராட்டங்களை நடத்துவது என்பதையெல்லாம் கடந்து, இந்திய சமூகங்கள் தங்களது சமையலறைகளையும், பூஜையறைகளையும், அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை பெண்களுக்கே உள்ளது என்ற கருத்தையும் நேருக்கு நேராய் எதிர்கொள்வது மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. 
 
கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் பேசியிருக்கக்கூடிய பொதுவுடமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை - இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்று விட்டன என்பது தான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியா?

Comments

Anonymous said…
அதிபுத்திசாலித்தனத்தோடு எழுதப்பட்ட கட்டுரை. சொந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு பெரிய சமூகவியல் முடிவுகளுக்கு எப்படி வரமுடிகிறது என்ற கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்ல உங்களால் முடியும்? நீங்கள் கட்டுரையில் சித்தரிப்பது போல மாட்டுக்கறி அப்படியொன்றும் கிடைக்க முடியாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அது குறித்த உங்கள் முடிவிற்காக அது கிடைக்கவே முடியாத ஒன்று போல கதை உருவாக்கியதாக நினைக்கிறேன்.
80களிலேயே மாட்டு இறைச்சி வாங்குவது கடினம். புரசைவாக்கத்தில் இரு கடைகள் இருந்தன. அதுவும் மதியத்தோடு சரி. பாளையில் இருக்கும்போது மேலப்பாளையம் போய் வாங்குவோம். முன்னர் நாகர்கோவில் அனைதது ரொட்டிக் கடைகளிலும் கிடைத்தது. இப்போது போனால் கடை இருகுக்கு சரக்கைக் காணோம்.
writermahadevan said…
தலித்கள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் சமையலறைகளில் மாட்டுக்கறி சமைக்கத்தானே படுகின்றன. இவர்களின் எண்ணிக்கை சுமார் 40%க்கு மேல் வருமே. அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள்... பெரும்பான்மை இந்துக்களின் சமையலறைகளில் ஏன் மாட்டுக்கறி இல்லை என்றுதானே தலைப்பு இருக்கவேண்டும்.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக