Skip to main content

அம்பேத்கரை வாசிப்பது எப்படி அல்லது அபிலார்டின் காதல்



 வணக்கம்.

இந்த முக்கியமான கட்டுரை குறித்த தங்கள் விளக்கங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேண். ஆனால் சில இடங்களில் அம்பேத்கரின் பொருளுக்கும் தங்கள் விளக்கத்துக்கும் இடையே சற்று வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது. அவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 தாங்கள்: ”பிராமணர்கள் இந்த நாட்டின் பல்வேறு சீர்கேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் தாம் என்பதில் அம்பேத்கருக்கு மாற்றுக்கருத்துகள் இல்லை. அதற்கான பழி அவர்களையே வந்து சேரும் என்றும் அவர் கணிக்கிறார். அது தொடர்பான குற்றவுணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம் என்றும் எழுதுகிறார்.”
 
அம்பேத்கர்: ”Similar in argument is the theory that the Brahmins created the Caste. After what I have said regarding Manu, I need hardly say anything more, except to point out that it is incorrect in thought and malicious in intent. The Brahmins may have been guilty of many things, and I dare say they were, but the imposing of the caste system on the non-Brahmin population was beyond their mettle. They may have helped the process by their glib philosophy, but they certainly could not have pushed their scheme beyond their own confines.”
 
பிராமணர்கள் எவ்வளவோ குற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்திருக்கலாம், இருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் பிராமணரல்லாதோர் மீது சாதி அமைப்பை சுமத்துவது அவர்களுடைய திறனுக்கு அப்பாற்பட்டது. பிராமணர்கள்தான் சாதியை உருவாக்கினார்கள் என்று கூறுவது பிழையான சிந்தனை மட்டுமல்ல, வன்ம நோக்கமுடையது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
தாங்கள்: ”வரலாற்றின் ஏதோவொரு தருணத்தில் பிராமணர் என்ற பூசகர் வர்க்கம், பிற வர்க்கங்களிலிருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டு, தன்னைத் தானே தளையிட்டுக் கொள்வதன் மூலம் சாதியாக உருவெடுக்கத் தொடங்கியது. இது கண்டு அதன் அருகாமை வர்க்கங்கள் முதலில் குழம்பிப் போயிருக்க வேண்டும். இயல்பானவொரு பதட்டத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். பிராமணர்கள் தங்களைத் தாங்களே அடைத்துக் கொள்வது அருகிலிருக்கும் பிறரின் இருப்பையும் கவலைக்குறியதாய் மாற்றுவதை உணர்ந்து கிலியடைந்திருக்க வேண்டும்.”
அம்பேத்கர் தன் கட்டுரையில் இப்படிப் பொருள்படும்படியாக எதையும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. (பத்திகள் 40-44)
 
தாங்கள்: ”தனது கதவுகளை மூடுவதன் மூலம் பிராமணர்கள் பிற சாதிகளின் கதவுகளையும் இழுத்து சாத்துகிறார்கள்.”
 
இது பிழையான கூற்று. போலச் செய்தல் என்பது மற்ற செயல்பாடுகளைப் போலத்தான். ஒரு தன்னிச்சையான செய்கைக்கு அதைச் செய்பவர்தான் பொறுப்பாக இருக்கமுடியும். போலச் செய்தலின் உளவியல் காரணங்களை அம்பேத்கர் விளக்கியுள்ளார். அடுத்தவரின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு பிராமணர்கள் எப்படிப் பொறுப்பேற்கமுடியும்? அம்பேத்கரின் விளக்கம் இதைத்தான் சுட்டுகிறது: சாதிகளின் உருவாக்கம் தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தவிர (அதாவது, மற்ற அனைவராலும் வெளியே நிறுத்தப்பட்ட சாதிகளைத் தவிர) மற்ற அனைத்துச் சாதியினரின் அவரவர் வழி செயல்பாட்டினால் கூட்டாக நிகழ்த்தப்பட்டது என்பதுதான்.
தாங்கள்: ”ஒரு சாதியிலிருந்தே இந்தக் குழப்பங்கள் அனைத்தும் தோன்றின.”
 
இப்படிப் பொருள்படும்படியாக அம்பேத்கர் தன் கட்டுரையில் எதையும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் அம்பேத்கர் சாதிகளின் உருவாக்கத்தையோ பரவலையோ களேபரம் என்றோ குழப்பம் என்றோ இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை. அதற்கான அறிவார்ந்த காரணங்களும் அவருக்குத் தட்டுப்படவில்லை என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
அம்பேத்கர் ஒரு சமூக அறிவியலாளரின் உள்ளச் சமநிலையோடு அறிதல் நியாயங்களுக்கேற்ப இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். கட்டுரையிலிருந்து பெறப்படும் சாத்தியமே இல்லாத (பிராமணர்கள் பற்றிய) சில எதிர்மறைக் கருத்துகள் தங்கள் விளக்கத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இது தமிழ்ச் சூழலில் நிலை கொண்டுள்ள கதையாடலின் தாக்கம் என்றே கருதுகிறேன். எனவே, அக்கதையாடலுடன் முக்கியமான அம்சங்களில் முரண்படக்கூடிய அம்பேத்கரின் கட்டுரை இதுவரை அதிகம் பேசப்படாமலிருந்திருப்பது வியப்பளிக்கவில்லை.

நன்றி
.

N. Kalyan Raman



அன்புள்ள கல்யாண ராமன், 'அம்பேத்கரின் பொருளுக்கும் தங்கள் விளக்கத்துக்கும் இடையே சற்று வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது ' என்று நீங்கள் எழுதியிருப்பதை, அம்பேத்கரை (அல்லது ஒரு எந்தவொரு அறிஞரையும்) வாசிப்பது எப்படி என்ற சிக்கலாக எடுத்துக் கொண்டு உங்களுக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.  அதற்கு முன், அம்பேத்கரின் கட்டுரை பற்றி நான் எழுதியதை 'மொழிபெயர்த்தேன்' என்று நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்ற முன்முடிவை உங்களைக் கேட்காமலேயே என் மனதில் இருத்திக் கொள்கிறேன்.

அறிஞர்களின் சிந்தனைகளை வாசிப்பது குறித்து ஏராளமானோர் விவாதித்திருக்கிறார்கள்.  ஆதியில் rhetoric, அப்புறம் hermeneutics, தற்போது semiotics என்று இது மொழியியலின் நிரந்தரமான சிக்கல்.  இவர்களில் நான் முக்கியமான சாகசக்காரர்களாகக் கருதுவது இரண்டு பேர் - பியர் அபிலார்ட், லூயி அல்தூஸர்.  இவ்விருவரும் புத்தகங்களை என்ன செய்வது என்று திகைத்து நின்றவர்கள் - தாங்கள் வாசிப்பதற்காக எடுத்துக் கொண்ட புத்தகங்களையும், அவை பற்றி தாங்கள் எழுதிய புத்தகங்களையும்!.

12ம் நூற்றாண்டைச் சார்ந்த பியர் அபிலார்ட் என்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர், பல்வேறு காரணங்களுக்காய் சிறப்பிக்கப்படுபவர்.  கிறிஸ்தவ பாதிரியாராக வாழ்ந்து வந்த அபிலார்ட், ஐரோப்பியப் பொருள்கோளியல் மரபின் படி, அவர்களது புனித நூலான 'வேதாகமத்திற்கு' விளக்கமெழுதுவதைத் தனது வாழ்நாள் பணியாகச் செய்து வந்தார். 

வேதாகத்திற்கான உரை எழுதும் செயல்பாட்டில், அறிவின் தோற்றம், மொழியின் தோற்றம், கருத்தாக்கங்களின் உருவாக்கம் என்பவை போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற அபிலார்ட், தான் தேடிக்கண்டுபிடிக்கும் பதில்கள் நேர்மையானவையாய் இருக்கவேண்டுமென்றும் விரும்பினார்.  அவர் எழுப்பிய கேள்விகள் பலவும் அடிப்படையானக் கேள்விகளாக இருந்தன.  அவற்றிற்கான தர்க்க ரீதியானப் பதில்களைத் தேடி அவர் சென்ற பயணம், பல நேரங்களில் அவர் சார்ந்திருந்த கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைகளுக்கு விரோதமான பதில்களையே தந்து வந்தன. 

ஒவ்வொரு முறை இவ்வாறு அறிவியல் பூர்வமான ஆனால், மத நம்பிக்கைகளுக்கு விரோதமான பதில்களைக் கண்டடையும் போதெல்லாம், பெரும் குழப்பமே அவரை சூழ்ந்திருந்தது.  தனது பொருள்கோளியல் செயல்பாட்டில் தர்க்கத்திற்கு ஆட்படுவதா அல்லது நம்பிக்கைக்குக்கு ஆட்படுவதா என்ற சிக்கலில் அபிலார்ட் துணிச்சலாக தர்க்கத்தின் சார்பு நிலையையே மேற்கொண்டார்.  இதனால், ஒவ்வொரு முறையும் மதம் அவரையும் அவரது எழுத்துகளையும் நிராகரித்தது.  மன்னிப்பு வேண்டுமென்றால், அவர் தனது எழுத்துகளை நிராகரித்து விட்டு (நிராகரிப்பது என்றால் அத்தனையையும் தீக்கு இரையாக்கிவிட்டு) வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தது கிறிஸ்தவம்.  அபிலார்டும் அப்படியே தனது எழுத்துகளை தீயிட்டு கொழுத்தி விட்டு, மறுபடியும் பொருள்கோளியல் செயல்பாட்டில் இறங்கி, முன்னதைக் காட்டிலும் அதிகசர்ச்சைக்குரிய நூலோடு திரும்பினார்.

அவரது மிக முக்கியமான மொழியியல் சிந்தனை, மொழி இறைவனால் அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதாக இருந்தது.  இக்கருத்தை அவர், 'எல்லா சொற்களும் 'பெயர் சொற்களே' என்ற அறிவிப்பிலிருந்து வளர்த்தெடுத்தார்.  மனிதன், இவ்வுலகில் தான் கண்ட அனைத்திற்கும் 'பெயர்கள்' என்ற அடையாளத்தை இட்டான்; மனிதன் அறிந்திராத எந்தவொரு பொருளுக்குமான பெயர்கள் என்று சொல்லக்கூடிய சொற்கள் எவையும் மொழியில் இல்லை.  எனவே 'மொழி மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று' என்பதே அபிலார்டின் வாதம். 

வேறொரு இடத்தில், சொல்லாடல்களை, அவற்றினுள் ஒலிக்கும் காலத்தைக் கொண்டு, அபிலார்ட் மூன்றாக வகைப்படுத்துகிறார் - புராணச் சொல்லாடல்கள், வரலாற்றுச் சொல்லாடல்கள், தளச் சொல்லாடல்கள்.

இம்மூன்று வகைச் சொல்லாடல்களும் எல்லா சமூகங்களிலும் செயல்படுகின்றன என்று சொல்லும் அபிலார்ட், ஒவ்வொரு முறை இச்சொல்லாடல்கள் வாசிக்கப்படுகையிலும், அவை சமகாலப் பின்னணியோடே வாசிக்கப்படுகின்றன என்கிறார்.  எனவே, அது எந்த வகையான சொல்லாடலாக இருந்தாலும், வாசிப்பவரின் அரசியல் சார்ந்தே வாசிக்கப்படுகிறது, அதாவது அவரின் கருத்தியல் சார்பு நிலையோடே வாசிக்கப்படுகிறது.  இதன் மூலம், 'எல்லாச் சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே!' என்பது அபிலார்டின் முடிவு.

இதையெல்லாம் கடந்து அபிலார்டிற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது யெலுவலீஸ என்ற பெண்ணுடனான காதல்.  மிகச் சிறப்பான காதல் கடித பரிமாற்றங்களும், திடுக்கிடும் சம்பவங்களும், காமமும் நிறைந்த காதல் காவியம் அது.  அக்காதல் கதையின் நாடக வடிவம் அபிலார்டின் சிந்தனைகளை விடவும் பிரபலமானது.


லூயி அல்தூஸர், கார்ல் மார்க்ஸின் எழுத்துகளை வாசிப்பது குறித்த முறையியல்களை வடிவமைத்தவர்.  ஒரு கட்டத்தில், கம்யூனிச இயக்கங்களும், சோவியத் அரசாங்கமும் மார்க்ஸின் எழுத்துகளை பாராயணம் செய்யச் சொல்லாத குறையாக படுத்திய போது, Reading Capital  என்ற புத்தகத்தோடு வந்தவர் அல்தூஸர்.

சிந்தனையாளர்கள் பிறப்பதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக உருவாகுகிறார்கள் என்ற அடிப்படையில், மார்க்ஸ் எப்பொழுது மார்க்ஸியவாதியாக உருவாகுகிறார் என்று அவரது எழுத்துகளின் வழியே கண்டறிய முயன்றவர் அல்தூஸர்.  மார்க்ஸின் எழுத்துகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய அல்தூஸர், எல்லா சிந்தனையாளர்களிடத்திலும் ஒரு அறிவுத்தோற்றவியல் நிலைமாற்றம் (epistemological break)   நிகழுமென்றும் அது மார்க்ஸின் எழுத்துகளில் எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் தெளிவாக அடையாளப்படுத்தியவர்.
எந்தவொரு பனுவலை வாசிப்பதற்கு முன்னும் இந்த இரு அனுமானங்களை நான் மனதிலிருத்திக்கொள்கிறேன்:
'எல்லா சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே'
'எல்லா சிந்தனையாளர்களிடத்தும் அறிவுத்தோற்றவியல் நிலைமாற்றம் நிகழ்கிறது.'

மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகிற, மாற்று விளக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிற, மாற்று உரைகளுக்கு உட்படுத்தப்படுகிற பனுவல், சாத்தியப்படுகிற பிற அனைத்துப் பனுவல்களோடும் கொண்டுள்ள ஊடாட்டங்களைக் கவனத்தில் கொள்வது தான் அடிப்படையான விதி.  பனுவலிடைச்செயல்பாடு intertextuality  என்று சொல்லப்படும் பனுவலிடை உறவுகளை அறிதல் தான் சவாலான காரியம்.

அம்பேத்கரை வைத்தே உங்களுக்கு விளக்கம் சொல்வதானால், அவர், 'தனியான சாதி என்று எதுவுமில்லை; சாதியை, அமைப்பினுள் இருத்தியே விளங்கிக்கொள்ள வேண்டும்; 'சாதிகள்' என்பது தான் யதார்த்தம்' என்று குறிப்பிடுவதை விளங்கிக்கொண்டால் பனுவலிடைச் செயல்பாடு என்பதன் பொருள் விளங்கும்.

உரையெழுதும் முறையியல் பற்றி பேசுகையில் தொல்காப்பியம் இதே போன்ற ஒரு செய்தியை 'அகலவிளக்கல்' என்ற பெயரில் பரிந்துரைக்கிறது.  ஒரு பாடலுக்கான உரையெழுதுகிறவர்கள் அதில் பயின்று வரக்கூடிய உவமையோ அல்லது சொற்றொடரோ அல்லது தகவலோ வேறு வேறு பனுவல்களில் எப்படி எப்படியெல்லாம் பயின்று வந்திருக்கிறது என்று எடுத்துச் சொல்வதைக் கவனித்திருக்கலாம். அப்படியான ஒட்டு மொத்த பயன்பாட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்டிருக்கும் பாடலுக்கு விளக்கம் சொல்வதை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அம்பேத்கரையும் இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்பது அவரது ஒட்டு மொத்த எழுத்துகளிலிருந்து உருவாகி வருவதே தவிர அந்த கட்டுரை இந்தக் கட்டுரை என்று பிரிபிரியாய் உருவுவது அல்ல.  அதே போலத்தான், பிராமணர்கள் பற்றிய அவரது பார்வையும்.  இந்தக் கட்டுரையில் பிராமணர்களை மெல்லமாக கோபிக்கிறார்; அந்தக் கட்டுரையில் அவர்களை அண்டவே விடாமல் செய்கிறார் என்பது சிறு பிள்ளைகளின் விளையாட்டிற்கு வேண்டுமானால் சரியாக இருக்குமேயொழிய அறிவியல்பூர்வ அணுகுமுறையாய் இருக்க முடியாது.

பிராமணர்கள், அகமணமுறையைக் கைக்கொண்டதன் வாயிலாகத் தங்களை மூடிக்கொண்டதுமல்லாமல் பிறரது கதவுகளையும் சேர்த்து மூடினார்கள் என்பதை, ஒரே பொத்தானில் ஒன்பது கதவையும் அடைப்பது என்றா புரிந்து கொள்ள வேண்டும்.  இன்னும் அதிகமான கற்பனையை வேண்டுவது இந்த 'கதவை மூடுதல்' உவமை.  உம்பர்ட்டோ ஈகோவின் Name of the Rose ல் வில்லியமும் அட்ஸோவும் தடுமாறும் நூலகப்புதிர்பாதைகளையொத்த கட்டுமானத்தைக் கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது.
பூசக வர்க்கம் தன்னை சாதியாக மாற்றிக்கொண்டதும் பிராமணரல்லாதோர் குழப்பத்தை உணர்ந்தனர் என்பதற்கு அம்பேத்கரின் வார்த்தைகளில் நீங்கள் வாக்குமூலத்தை எதிர்பார்ப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்தியாவின் சாதியமைப்பு குறித்து அம்பேத்கர் அந்தக் கட்டுரையை எழுதுவதற்கே சாதியமைப்பு விளங்காத ஒன்றாக இருக்கிறது; புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது என்பது தான் காரணம். சாதியைப் பற்றி அறிவியல்பூர்வமாக அணுகக்கூடிய அனைவருக்கும் அது களேபரமாகவும் வேண்டாத குழப்பமாகவுமே இருக்கிறது.

Comments

N Kalyan Raman said…
மதிப்பிற்குரிய பேராசிரியர் தர்மராஜ்:

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் அம்பேத்கரின் கட்டுரையை மொழிபெயர்க்கவில்லை, ஒரு வகையான விளக்கவுரையைத்தான் தந்திருக்கிறீர்கள் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். ஆகவே இதில் எந்தச் சிக்கலும் இல்லை.

Abelard and Eloise, The Name of the Rose மற்றும் Althusser நிகழ்த்திய மறுவாசிப்பு இவற்றுடன் பரிச்சயம் உண்டு. இவற்றிலிருந்து நீங்கள் முக்கியமானதென்று நிறுவும் கீழ்க்கண்ட முடிவுகளிலும் நான் உடன்படுகிறேன்.

'எல்லா சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே'
'எல்லா சிந்தனையாளர்களிடத்தும் அறிவுத்தோற்றவியல் நிலைமாற்றம் நிகழ்கிறது.'

அம்பேத்கர் கட்டுரை மீதான உங்கள் விளக்கவுரையைக்கூட ஒரு குறிப்பிட்ட அரசியல் சொல்லாடலாகத்தான் பார்க்கிறேன். அதைப் பிறகு பார்ப்போம்.

சாதிகளின் இயக்கவமைப்பு, தோற்றம் மற்றும் வளர்ச்சி/பரவல் இவைபற்றி இருவகையான கருத்தியல்கள் இருக்கமுடியும்.

முதலாவது, பிராமணர்கள்தான் தங்கள் புனித நூல்களின் மூலம் சாதி அமைப்பைத் தோற்றுவித்து மொத்த சமூகத்தையும் அதற்கு உட்படுத்தி ஆதிக்கம் செலுத்திவந்தனர். சாதிகளின் / சாதியமைப்பின் இயக்கம் இந்த சாஸ்திரங்களின்படிதான் நிகழ்ந்துவருகிறது. எனவே சாதியமைப்பின் வன்கொடுமைக்கும் அநீதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிராமணர்களே பொறுப்பு என்பதாகும். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் முன்னெடுத்த பிராமணரல்லோதார் அரசியல் இந்த அடிப்படையில்தான் பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாதோரை ஒன்று திரட்டி அதிகார மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக ஒரு அரசியல் இயக்கத்தை நடத்தியது.

இரண்டாவது, அம்பேத்கர் தன் 1916 கட்டுரையில் முன்வைப்பது. அதாவது, பிராமணர்கள் என்னும் பூசக வகுப்பினர் முதன்முதலாக அகமணமுறை மூலம் ஒரு அடைப்புக்குள் இருத்திக்கொண்டனர். அம்பேத்கர் சொல்வது போல் அதே நேரத்தில் அவர்கள் பிராமணரல்லாதோர் என்ற சாதியை உருவாக்கினர் என்று கூறலாம். ஆனால் இந்த பிராமணரல்லாதார் என்ற குழு அப்படியே நிலைத்துவிடவில்லை. இந்தக் குழுவுக்குள்ளும் அதிகாரத்திலும் சமூகப் படிநிலையிலும் பிராமணர்களுக்கு அருகே இருந்தவர்கள் பிராமணர்கள் பயன்படுத்தும் அதே அகமணமுறையைப் பின்பற்றித் தங்களை ஒரு சாதியாக உருவாக்கிக்கொண்டார்கள். இது படிப்படியாக மற்ற குழுக்களுக்கும் பரவி பல்வேறு சாதிகள் தோன்றின. எல்லோராலும் வெளியே நிறுத்தப்பட்டவர்கள் தாங்களும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்கள். ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை சமூகத்தின் ஆசானாக தன்னை இருத்திக்கொண்ட பிராமண சாதி நியதிகளாக சீர்ப்படுத்தி வர்ணாசிரம தர்மம் என்ற கொள்கை மூலம் சாதி அமைப்பை நியாயப்படுத்தி ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் சாதியின் நீடிப்பு சாத்திரங்களால் நிகழவில்லை; அந்தந்த சாதியினர் அகமணமுறை சார்ந்த விதிகளைப் தத்தம் குழுவுக்குள் வலியுறுத்துவதன் மூலமாகத்தான் நிகழ்கிறது என்று ஒரு materialist நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.

அம்பேத்கரின் கட்டுரையிலிருந்து இப்படியும் புரிந்துகொள்ளலாம். அதிகாரத்திலும் அந்தஸ்திலும் பிராமணர்களுக்கு நெருக்கமாக இருந்த வகுப்பினர் சாதியாக உருமாற்றம் பெற்றதால் அதிகாரங்களையும் ஆதாயங்களையும் பிறரைச் சுரண்டக்கூடிய வாய்ப்புகளையும் பெற்றிருந்தார்கள். இது எல்லா சாதிகளுக்கும் ஒரே மாதிரி இருக்கவில்லை. பூசகர்கள், நில உடைமையாளார்கள், படைவீர்ர்கள், வணிகர்கள் இவர்கள் அனைவருக்கும் சாதி அமைப்பினால் ஆதாயங்கள் இருந்தன. இந்த ஆதாயங்கள் இன்றளவிலும் வெவ்வேறு வடிவத்தில் நீடிக்கின்றன என்பதும் கண்கூடு.

சாதி அமைப்பின் தோற்றத்திலும் சரி அதன் நீடிப்பிலும் சரி, பிராமணர்கள் தவிர, பிராமணரல்லாத ஆதிக்க சாதிகளுக்கும் தன்னிச்சையான agency-யும் நோக்கங்களும் ஆதாயங்களும் எப்போதுமே இருந்தன, இருந்து வருகின்றன என்று நிறுவுவதாகத்தான் அம்பேத்கரின் இந்தக் கட்டுரையை வாசிக்கிறேன். பிராமணரல்லாதோர் அரசியலோ சாதி அமைப்பில் பிராமணர்களை மட்டும் மையப்படுத்தும் முகமாக அருவமான சாஸ்திரங்களை முன்னிலைப்படுத்தி பிராமணரல்லாத ஆதிக்கசாதிகளின் agency-யை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுத்துவருகிறது (தொடரும்)
N Kalyan Raman said…
இப்போது உங்கள் கூற்றுகளுக்கு வருவோம்.

”தனது கதவுகளை மூடுவதன் மூலம் பிராமணர்கள் பிற சாதிகளின் கதவுகளையும் இழுத்து சாத்துகிறார்கள்.”

இப்படிச் சொல்வது முதன்மையாக அம்பேத்கரின் கீழ்க்கண்ட அறிவியல்பூர்வமான கூற்றுக்குப் புறம்பாக இருக்கிறது.

”The Brahmins may have been guilty of many things, and I dare say they were, but the imposing of the caste system on the non-Brahmin population was beyond their mettle. They may have helped the process by their glib philosophy, but they certainly could not have pushed their scheme beyond their own confines.”

இரண்டாவதாக, தங்களை சாதியாக உருவாக்கிக் கொண்டு அதனால் பயனடைந்து வருகிற வகுப்பினரின் ஏஜன்சியை மறுப்பதாகவும் இருக்கிறது. சொல்லப் போனால் ‘அடியைப் பிடிடா, பாரத பட்டா’ என்று பிராமணல்லாதோரின் அரசியலை அதன் போதாமைகளுடன் மீண்டும் கண்டடைவது போலத்தான் இருக்கிறது. என் கற்பனை இப்படித்தான் இருக்கிறது. ’போலச் செய்தல்’ மூலம் அகமணமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யும் ஒரு ஆதிக்க வகுப்பினரின் கதவை அடுத்தவர் இழுத்து சாத்துகிறார்கள் என்று சொல்வது எந்த மேம்பட்ட உண்மைக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடும்? அப்படிப் ”போலச் செய்தவர்களின்” இருப்பையும் செயல்பாட்டையும் நீங்கள் மழுப்புவதன் தேவை என்ன? அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
==

”பூசக வர்க்கம் தன்னை சாதியாக மாற்றிக்கொண்டதும் பிராமணரல்லாதோர் குழப்பத்தை உணர்ந்தனர் என்பதற்கு அம்பேத்கரின் வார்த்தைகளில் நீங்கள் வாக்குமூலத்தை எதிர்பார்ப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.”

நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, ஐயா. ஒன்றை அது இல்லை என்று சொன்னால் அதன் இருப்பை வலிந்து எதிர்பார்க்கிறேன் என்று பொருட்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களின் உணர்வு நிலையை நீங்கள் கற்பனை செய்திருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. ஏன். பிராமணர்களுக்கு மிக அருகாமையில் இருந்து ”போலச் செய்தல்” மூலம் சாதியாக மாறி ஆதாயங்களைப் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கக்கூடாதா? ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன். எல்லாச் சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்கள்தாம், ஆனால் எல்லா அரசியல் சொல்லாடல்களும் ஒரே தரத்தவை அல்ல.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். பிராமணரல்லாதார் என்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிட்ட அரசியல்-வரலாற்றுத் தருணத்தில் பிரிட்டிஷ் கீழைத்தேயவிலாளர்கள் உருவாக்கிய கருத்தாக்கம். அதை நீங்கள் வரலாற்றுக்கு முந்தைய ஓரு தருணத்தில் பொதுவான உணர்வு நிலையைக் கொண்ட மக்கள் தொகுப்பாக முன்வைப்பது வியப்பாக இருக்கிறது. சாதி தேவையற்றதுதான்; ஆனால் அதுவே இவ்வகைக் கற்பனைகளை நியாயப்படுத்திவிடாது.

=====

மூன்றாவதாக, இந்தக் கட்டுரையில் அம்பேத்கர் சாதியின் தோற்றத்திலும் நீடிப்பிலும் பல்வேறு வகுப்பினரின் பங்கு என்பதைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். அதுதான் அவருடைய பேசுபொருள். இந்த சப்ஜெக்டைப் பற்றி வேறுவிதமாக அவர் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. எனவே இதில் inter-textuality, epistemological break எல்லாம் எப்படித் தொழிற்படும் என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும்.

சாதியைப் பற்றிய சொல்லாடல் சாத்தியாங்களில் பிராமணர்களை மட்டுமே மையப்படுத்தி கட்டப்படும் சொல்லாடலில் உங்களுக்கு இருப்பதாகத் தோன்றும் ஆர்வம் எனக்கு நிச்சயமாக இல்லை. அதற்கு பிராமணரல்லாதோர் அரசியல் மீது எனக்குள்ள விமர்சனம்தான் காரணம். அம்பேத்கர் பிராமணர்களைக் கடுமையாகச் சாடியிருக்கலாம். ஆனால் அவருடைய அரசியல் பிராமணரல்லாதோரின் அரசியல் அல்ல. அது இந்தக் கட்டுரையிலும் வெளிப்பட்டிருக்கிறது என்று கூறி முடித்துக் கொள்கிறேன்.

நன்றி.
Ara vendhan said…
From Ara Vendhan

அன்புள்ள கட்டுரையாசிரியருக்கு,

தாழ்மையுடன் அடியே எழுதிக்கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், கல்யாணராமன் களும், ராமசாமிகளும் தங்கள் மூலமாய் எதிர்பார்ப்பதெல்லாம், பிற்படுத்தப்பட்ட சாதிகளை or திராவிடர்களை or பிராமணர்தவிர்த்தோரை சாதி உண்டாக்கியதில் காரணம் காட்டி, நாலு வசவு வைது விடுங்கள், அவர்கள் அதை எடுத்துக் கொண்டு போய், தலித்துகள் (நீங்கள் தலித் தான் என்பதை ராமசாமியின் பட்டியல் மூலம் தெரிந்து கொண்டேன்) பார்ப்பனரல்லாதார் மீது வைக்கும் விமர்சனம் பாரீர் என்று ஊரெல்லாம் காட்டி, இன்னொரு ரவிக்குமாரை செய்து விடுவார்கள். இதற்கு வழி கொடுக்காமல் இருக்கும் வரை உங்களை அவர்கள் விடுவார்கள் இல்லை. இது போன்ற பெயருள்ள அனானிகளை ஒன்றுமே செய்ய முடியாது என்பதால் அடுத்த கட்டுரையிலாவது பிற்படுத்தப் பட்டோரை நையப்புடையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் சமூகத்துக்கு வணங்கும்

அர வேந்தன்

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக