Skip to main content

மெட்ராஸ் - உரையாடல்




இன்று வகுப்பறையில் மெட்ராஸ் திரைப்பட விமர்சனங்கள் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகள். 

கேள்வி:     மெட்ராஸ் திரைப்படத்தின் வாயிலாய் ஒடுக்கப்பட்ட சமூகம் பெருஞ்சமூகத்துடன் ஒரு உரையாடலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி அதில் முதற்கட்ட வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பதாக உங்கள் பதிவை நான் விளங்கிக் கொள்கிறேன்.  இருக்கலாம்.  திரைப்படங்கள் பெருஞ்சமூகத்துடன் உரையாடுவதற்கான ஊடகம் தான் என்பதில் பிரச்சினையில்லை.  ஆனால், மெட்ராஸ் திரைப்படம் ‘ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் கொண்டிருக்கிறது என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.  அது எவ்வாறு ஒலிக்கும்? அது ஒலிக்கையில் நமது காதுகளுக்கு அதனைக் கேட்கும் சக்தி இருக்குமா? அது வெளிப்படையாய் தன்னை அறிவித்த படி வருமா? அல்லது பூடகமாகத்தான் வெளிப்படுமா? அப்படியொரு ஒடுக்கப்பட்ட குரல் ஒலிப்பதற்கான தளங்கள் நம்மிடம் உண்டா? இப்படி தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
அடித்தளமக்கள் அல்லது விளிம்பு நிலையினர் ஆய்வுகள் (subaltern studies) மீது காய்த்ரி சக்கரவர்த்தி ஸ்பீவாக் எழுப்பிய கேள்விகளை முன்வைத்து இதே போன்றதொரு கருத்தோட்டத்திலும் உரையாடல்கள் நடைபெற்றுள்ளன.  மிகைல் பக்தினின் 'கார்னிவல்', ஜேம்ஸ் ஸ்காட்டின் 'நலிந்தோரின் ஆயுதம்' என்ற கருத்தாக்கங்கள் வாய்மொழிக் கதையாடல்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டோரின் குரல்களாகச் செயல்படுகின்றன என்பதை விரிவாகப் பேசியுள்ளன.

மெட்ராஸ் திரைப்பிரதி குறித்த எனது பதிவில் (மெட்ராஸ்: கருப்பு, வெள்ளை, நீலம்) இரு வேறு அழகியல் கூறுகள் முன்வைக்கப்படுவதையும், அவை படத்தின் போக்கில் முரணாக முற்றுவதையும் நான் விளக்கியிருந்தேன்.  இதே போன்ற கருத்துருவங்கள் இரஞ்சித்தின் முந்தைய திரைப்பிரதியிலும் (அட்டகத்தி) இடம்பெற்றிருந்தன.  அதே போல் மெட்ராஸ் திரைப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வார்க்கப்பட்ட முறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவையனைத்தும் இப்பிரதி ஒடுக்கப்பட்டவர்களின் குரலில் பேசுகிறது என்பதற்கான சான்றுகளாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.  இன்னும் ஒரு படி போய், நண்பனின் வன்கொலைக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம், 'அன்பா, கலையா?' என்று குழம்பித்தவிப்பதும் ஒடுக்கப்பட்டவனின் தன்னிலைக்கான அடையாளம் தான்.  இப்படி, படம் நெடுக, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான அரூப தடங்களை அப்பிரதி வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி:     'இது தலித் படம் அல்ல' என்று வாதிடுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அவர்கள் ஏன் இப்பிரதி குறித்து பதட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்?

அவர்கள் பதட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்ற முடிவிற்கு வரமுடியுமா என்று தெரியவில்லை.  அவர்களுடைய கற்பனைகளுக்குப் புறம்பாக இப்பிரதி இருக்கிறது என்று உணர்வைத்தான் அக்கட்டுரைகள் எனக்குக் காட்டுகின்றன. 
அவர்கள் 'தலித்'. 'தலித் விடுதலை', 'தலித் அரசியல்', 'தலித் இலக்கியம் - கலை - பண்பாடு' என்றெல்லாம் கொண்டிருக்கும் கட்டமைப்புகளுக்குள் இத்திரைப்படம் பொருந்தி வரவில்லை.
தலித் இலக்கியத்திற்கான அளவுகோல்களுடன் இத்திரைப்படத்தை அணுகமுடியாது என்பது அரிச்சுவடி.  தலித்துகள் தங்களது வாழ்க்கையை இலக்கியமாகப் பதிவு செய்த போது, தங்களது வாழ்க்கை குறித்த பனுவல்களுக்கும் 'இலக்கியம்' என்ற அங்கீகாரம் இருக்கவேண்டும் என்று நினைத்ததை விடவும், தங்களது வாழ்க்கையையும் உணர்வுகளையும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் புரிகிற வகையில் வெளிப்படுத்துவது என்பதைத் தான் தங்களது ரகசிய ஆசையாகக் கொண்டிருந்தனர்.  ஆனால், அது தேர்ந்தெடுத்திருந்த இலக்கிய வகைமை, பெருஞ்சமூகத்தின் வகைமையாக அல்லாமல், அச்சமூகத்திலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக ஒட்டாமல் ஒதுங்கி வந்தவர்களின் வகைமைகளாக மட்டுமே இருந்தன.  இதனாலேயே தலித் இலக்கிய முயற்சிகள் தமிழ் சமூகத்தளத்தில் பெரிய அளவிலான தாக்கங்கள் எதையும் எழுப்பாமல் போயின.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெருஞ்சமூகத்தினருக்கும் இடைப்பட்ட வெளியில் இயங்கக்கூடிய 'அதிருப்தியாளர்களின்' அரங்குகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட குரல்கள் கேட்கும் சூழல் இருந்து வந்தது.  அது தலித் இலக்கியமாக இருந்தாலும் சரி, தலித் கலை விழாக்களாக இருந்தாலும் சரி தான்.  அதற்கான வாசகர்களும், பார்வையாளர்களும் இந்த 'பெருஞ்சமூக அதிருப்தியாளர்கள்' தாம். இவர்கள் மார்க்சியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கலகக்காரர்களாகவும், புரட்சியாளராகவும், போராட்டக்காரர்களாகவும், நவீனர்களாகவும், அதி நவீனர்களாகவும் இருக்கமுடியும்.  ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெருஞ்சமூகத்தை நோக்கிப் பேசுகிற அத்தனையையும் இவர்களே காது கொடுத்து கேட்கிறார்கள்.  ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.  பெருஞ்சமூகம் மீதான அவர்களது அதிருப்தியும் ஒடுக்கப்பட்டவர்களின் காயங்களும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன. 

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பல்வேறு உணர்வுகளை இந்த அதிருப்தியாளர்கள் மிகக் கச்சிதமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.  அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த பெருஞ்சமூகத்தின் சொரணையற்ற தன்மையை இவ் அதிருப்தியாளர்களே கடுமையாகச் சாடியிருக்கிறார்கள். 

ஆனால், பெருஞ்சமூகம் குறித்து 'அதிருப்தியாளர்களுக்கும்' ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இன்னுமொரு ஒற்றுமையும் இருக்கிறது. அது, பெருஞ்சமூகம் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து மட்டுமல்ல, இந்த அதிருப்தியாளர்கள் குறித்தும் சொரணையற்றதாகத்  தான் இருக்கிறது.  (யார் இந்த பாண்டியன்? ஏதோ ஆய்வாளராமே? யார் இந்த பிரமிள்? எந்த நாட்டுக்காரர்? இப்படி...)

ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களும் 'பெருஞ்சமூக அதிருப்தியாளர்களும்' பெருமளவு ஒற்றுமைகளைக் கொண்ட தன்னிலைகளை உடையவர்களாகத் தோன்றுவதும் இதனால் தான். 'தலித்' என்பதைத் தங்களுக்கு மட்டுமேயான வெளியாக ஒடுக்கப்பட்டவர்கள் வரையறுத்த போது இவ்விருவர் இடையே தோன்றிய மனஸ்தாபங்களுக்கும் இதுவே தான் காரணம்.  இன்று மெட்ராஸ் திரைப்படம் குறித்து முன்வைக்கப்படும் கேள்விகளையும் நாம் இந்தத் தளத்திலேயே விளங்கிக் கொள்ளவேண்டும்.

கேள்வி:     அப்படியானால் மெட்ராஸ் திரைப்படம் தலித் அரசியலை முழுமையாகப் பேசவில்லை என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வது போலல்லவா இருக்கிறது?

மெட்ராஸ் திரைப்படம், 'ஓர் தலித் அரசியல் திரைப்படம்' / 'விடுதலையைப் பேசும் படம்' / 'தலித் இயக்கங்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் படம்' / 'தலித் மக்களின் வாழ்க்கையைப் பண்பாட்டைப் பதிவு செய்யும் படம்' என்று யாரும் துணிந்து விடவும் முடியாது, நிரூபிக்கவும் முடியாது.  மிகத் தெளிவாக அது மேற்கூறிய எந்த வகைமையையும் சார்ந்தது இல்லை.

அத்திரைப்படம் ஒடுக்கப்பட்ட சமூகத்து கதாபாத்திரங்கள், ஒரு நவீன ஒடுக்கப்பட்ட சூழலில், துரோகத்தையும், காதலையும், மரணத்தையும், தன்னிலை மீட்பையும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைத் தமிழ்த் திரைமொழியில் சொன்ன ஒரு படம்.  ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் பாதையில் செல்வதா (அன்பு பரிசோதித்து தோற்றுப் போன திராவிட அரசியல்) அல்லது புதிய பாதையில் செல்வதா (கலை பிரதி நிதித்துவப்படுத்தும் கல்வி என்ற பாதை) என்ற குழப்பம் ஒரு உணர்ச்சிகரமான முரணாக உருவெடுத்து, மானுட உறவுகளில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற உச்சத்தை தொட்டிருக்கும் என்றால் மெட்ராஸ் வேறு மாதிரியான படமாக இருந்திருக்கும். ஆனால், அதற்கான பார்வையாளர்கள் தமிழ் திரைப்படவுலகில் இருக்கிறார்களா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.   

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக